இந்தியா முழுவதும் கரோனாவின் கோரப்பிடியில் சிக்கித்தவித்து வரும் சூழலில், கரோனா கட்டுப்பாட்டில் கேரளா குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைப் பெற்றுள்ளது. நேற்று கேரளாவில் புதிதாக இரண்டு பேருக்கு மட்டுமே கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதேநேரம் நேற்று ஒருநாளில் அம்மாநிலத்தில் 36 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.

உலகம் முழுவதும் 18 லட்சத்திற்கும் அதிகமானோர் கரோனா வைரஸ் பரவலால் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், இதனால் 1.14 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர், 4.2 லட்சம் பேர் இதிலிருந்து குணமடைந்து மீண்டுள்ளனர். இந்தியாவை பொறுத்தவரை 9000க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தொற்று காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், 850க்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் கரோனா வேகமாக பரவிவரும் சூழலில், அதனைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக ஏப்ரல் 14 வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் நேற்று கேரளாவில் புதிதாக இரண்டு பேருக்கு மட்டுமே கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதேநேரம் நேற்று ஒருநாளில் அம்மாநிலத்தில் 36 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர் என அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கே.ஷைலஜா தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் முதல் கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது கேரளாவில்தான். கடந்த பிப்ரவரி மூன்றாம் தேதி சீனாவிலிருந்து கேரளா திரும்பிய மாணவிக்கு கரோனா தொற்று முதன்முதலில் கண்டறியப்பட்டது. அன்றுமுதல் கரோனா தடுப்புக்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் கவனம் செலுத்த ஆரம்பித்தது கேரள அரசு. மக்களிடையே சரியான தரவுகளின் அடிப்படையில் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், சமூக இடைவெளியின் முக்கியத்துவத்தை உணர்த்துதல் உள்ளிட்ட பணிகள் ஒருபுறம் நடந்த நிலையில், சுகாதாரத்துறை கரோனா சிகிச்சைக்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் வேகமாக முன்னெடுத்தது. இதன் பலனாக வேகமாகப் பரவத்தொடங்கிய கரோனா வைரஸைக் கட்டுப்படுத்தி, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வெறும் 376 என்ற அளவில் கட்டுப்படுத்தியுள்ளது கேரளா.
மொத்தமுள்ள 376 கரோனா பாதிக்கப்பட்டவர்களில் காசர்கோடு மாவட்டத்தில் 97 பேரும், கண்ணூரில் 42 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இந்த இரு மாவட்டங்களுக்கும் அதிகமான முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை கேரளாவில் இருவர் மட்டுமே கரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் நேற்று 36 பேர் குணமடைந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கே.ஷைலஜா தெரிவித்துள்ளார்.
இதன்படி அம்மாநிலத்தில் 194 பேர் மட்டுமே கரோனா பாதித்து மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர். மேலும், இதில் 179 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியாவிலேயே அதிகப்படியான கரோனா நோயாளிகள் குணமான மாநிலங்களின் பட்டியலில் மஹாராஷ்ட்ராவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தை கேரளா பெற்றுள்ளது.