இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வுக்கு இன்று (02.12.2019) மாலை (04.00 PM) முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பில் www.nta.ac.in, ntaneet.nic,in என்ற இணைய தள முகவரிகளில் டிசம்பர் 31 வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் விண்ணப்பத்துக்கான கட்டணத்தை செலுத்த ஜனவரி 1 ஆம் தேதி வரை தேசிய தேர்வு முகாமை அவகாசம் வழங்கியுள்ளது. மேலும் பொதுப்பிரிவினருக்கு ரூபாய் 1,500, ஓபிசி மற்றும் பொருளாதாரத்தில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு ரூபாய் 1,400, எஸ்.சி, எஸ்.டி, மாற்றுத்திறனாளி, திருநங்கைகளுக்கு விண்ணப்ப கட்டணம் ரூபாய் 800 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப கட்டணத்துடன் ஜிஎஸ்டி, சேவை கட்டணத்தையும் மாணவர்கள் செலுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளது. எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு அடுத்தாண்டு மே மாதம் 3 ஆம் தேதி நீட் நுழைவுத்தேர்வு நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதன் தொடர்ச்சியாக நுழைவுத்தேர்வு முடிவுகளை அடுத்தாண்டு ஜூன் மாதம் 4 ஆம் தேதிக்குள் வெளியிட தேர்வு முகமை ஏற்பாடு செய்துள்ளது. பிளஸ்2 முடித்த மாணவர்கள் மருத்துவ கல்லூரிகள், எய்ம்ஸ், ஜிப்மரில் சேர நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.