தொடர் கனமழையால் கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் முண்டக்கை என்ற இடத்தில் இன்று (30.07.2024) நள்ளிரவு 1 மணியளவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் அதிகாலை 4 மணியளவில் சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் சூரல்மலை என்ற இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த இரு நிலச்சரிவுகளில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். 30 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என முதற்கட்ட தகவல் வெளியாகியிருந்தது.
அதே சமயம் இந்த நிலச்சரிவில் சுமார் 500 வீடுகள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிக்கி உள்ளதாகத் தகவல் வெளியாகி இருந்தது. இது குறித்து தகவல் அறிந்த அரக்கோணம் தேசிய பேரிடர் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த இரு நிலச்சரிவு சம்பவங்களும் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலச்சரிவில் 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சிக்கியுள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. அதோடு மீட்புப் பணிகளை ஒருங்கிணைக்க இரண்டு விமானப்படை ஹெலிகாப்டர்கள் கோவை மாவட்ட சூலூரில் இருந்து வயநாட்டிற்கு சென்றுள்ளன.
இத்தகைய சூழலில் தான் இந்த நிலச்சரிவில் சிக்கி இரு குழந்தைகள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும் மண் சரிவில் சிக்கியுள்ளவர்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 50க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்தச் சம்பவம் தொடர்பாகக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி எம்.பி. மக்களவையில் பேசுகையில், “இன்று அதிகாலையில் வயநாடு பல பேரழிவு தரும் நிலச்சரிவின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. இதில் 70க்கும் மேற்பட்டோர் பலியான துயரத்தின் அளவை மதிப்பீடு செய்ய நான் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் மற்றும் கேரள முதலமைச்சரிடம் பேசினேன்.
இந்த நிலச்சரிவில் சிக்கி இறந்தவர்களை மீட்கவும், மருத்துவ உதவிக்காகவும், உடனடியாக இழப்பீடு வழங்கப்பட வேண்டும். அந்த இழப்பீடும் அதிகரிக்கப்பட்டு வழங்கப்பட வேண்டும். முக்கிய போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு பாதைகளை சீக்கிரம் சீரமைத்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களின் மறுவாழ்வுக்கான சாலை வழித் தொடர்பை தயார் செய்ய வேண்டும். மேற்குத் தொடர்ச்சி மலைகளின் சுற்றுச்சூழல் பலவீனமான பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக நிலச்சரிவுகளில் அபாயகரமான அதிகரிப்பைக் கண்டுள்ளது.
மேலும் நிலச்சரிவு ஏற்படக்கூடிய பகுதிகளை கண்டறிந்து அப்பகுதிகளில் அதிகரித்து வரும் இயற்கை பேரிடர்களை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதும் அவசரத் தேவையாக உள்ளது. அதோடு இதுபோன்ற நிலச்சரிவில் இருந்து மக்களை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” எனப் பேசினார். அதே சமயம் வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் நிலச்சரிவு மீட்புப் பணிகளுக்கு உடனடியாக ரூ.5 ஆயிரம் கோடியை மத்திய அரசு நிவாரண நிதியாக ஒதுக்க வேண்டும் என மாநிலங்களவையில் கேரள எம்.பி.க்கள் கோரிக்கை வைத்தனர்.