புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
“இடைக்கால பட்ஜெட் என்பது ஆட்சி முடியும் காலம் வரை மட்டுமே தாக்கல் செய்யப்பட வேண்டும். ஆனால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இடைக்கால பட்ஜெட் 2030 வரை 11 ஆண்டுகளுக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பாராளுமன்ற தேர்தலை முன்வைத்து விவசாயிகளுக்கான திட்டத்தை இடைக்கால நிதியமைச்சரும், பிரதமர் மோடியும் பட்ஜெட்டில் அறிவித்துள்ளனர். விவசாயிகளின் வாக்குகளை பெறுவதற்காகவே விவசாயிகளுக்காக ஆண்டு உதவித்தொகை ரூ 6000 என்பது ஓட்டுகளை நம்பி இந்த திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு ஆண்டுக்கு 80000 கோடி தேவைப்படும் எனும் பட்சத்தில் இதற்கான நிதி எங்கிருந்து வருவது என தெரிவிக்கவில்லை. இதுபோன்ற விவசாயிகளுக்கான திட்டங்கள் புதுச்சேரி, ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்களின் மானிய திட்டங்களாக செயல்படுத்தப்படுபவைதான். அதுபோல் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான ஓய்வூதியம் மாதம் 3000 ரூபாய் என்பதையும் எப்படி கொடுக்கப்போகிறார்கள் என தெரியவில்லை. திட்டத்தை அறிவித்தவர்கள் அவற்றுக்கான நிதி ஆதாரம் பற்ரி சொல்லவில்லை.
ஏற்கனவே மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி வரி விதிப்பு போன்றவற்றால் மக்களின் மீது பல நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது. பட்ஜெட்டின் புதிய திட்டங்களால் மேலும் நிதி நெருக்கடி ஏற்படும் “ என்று கூறினார்.
அதேசமயம் மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் பாராட்டுதலுக்குரியது என அ..தி.மு.க சட்டப்பேரவை கட்சித்தலைவர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அன்பழகன், “ மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் ஏழை ,எளிய, நடுத்தர, விவசாய, மீனவ, அமைப்பு சாரா தொழிலாளர்கள் நலனுக்கு பயன் தரும் பட்ஜெட்டாக உள்ளது.
பல்வேறு பிரச்சினைகளுக்கு இடையிலும் அனைத்து தரப்பு மக்களின் நீண்டநாள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் பட்ஜெட்டாக உள்ளது. விவசாயிகளுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்குவது அவர்களின் வாழ்வில் நிரந்தர ஒளியேற்றும் செயலாகும். ஜெயலலிதாவின் நீண்ட நாளைய கோரிக்கையான விவசாயத் துறையில் இருந்து பிரித்து மீனவர்களுக்கு தனித்துறை உருவாக்கப்பட்டிருப்பது ஒட்டுமொத்த மீனவர்களுக்கு கிடைத்த வெற்றி ஆகும். இதன் மூலம் மீனவர்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்படும். சிறு தொழில் புரிவோருக்கு வட்டி கடனில் 2 சதவீதம் குறைக்கப்பட்டு இருப்பது சிறு தொழில் புரிவோர் நலனுக்கு உகந்ததாகும்.
நாடு முழுவதும் பல கோடிக்கணக்கான அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு மாதம் 3000 ரூபாய் ஓய்வூதியம் என்பது மனிதாபிமான அடிப்படையில் அவர்களின் நீடித்த வாழ்வுக்கு உதவிடும் திட்டமாகும். தனிநபர் வருமான உச்சவரம்பு இரண்டரை லட்சத்திலிருந்து 5, லட்சமாக உயர்த்தி இருப்பது நடுத்தர மக்களுக்கு ஏற்புடையதாகும். ஒட்டு மொத்தத்தில் அனைத்து தரப்பு மக்களின் நலனுக்காக அறிவிக்கப்பட்டுள்ள பல்வேறு அறிவிப்புகள் காலம் கடந்து அறிவிக்கப்பட்டிருந்தாலும் பாராட்டுக்குரிய அற்புதமான பட்ஜெட் ஆகும். மத்திய அரசின் அனைத்து அறிவிப்புகளையும் பாராட்டியுள்ள நம்முடைய துணை நிலை ஆளுநர், புதுச்சேரி மாநிலத்தினுடைய பொங்கல் பரிசு உள்ளிட்ட பல்வேறு இலவச நலத்திட்ட உதவிகளை எதிர்ப்பது ஏன்..? என்பதை உணரவேண்டும்” என்றார்.