சுவிஸ் வங்கியில் ரூ.196 கோடி டெபாசிட் வைத்திருப்பதாக மும்பையைச் சேர்ந்த 80 வயது மூதாட்டி ஒருவருக்கு மும்பை வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மும்பையில் வசிக்கும் ரேணு தரணி (80) ஜெனீவாவில் உள்ள ஹெச்.எஸ்.பி.சி. வங்கியில் அறக்கட்டளை ஒன்றின் பெயரில் கணக்கு வைத்திருந்ததாகவும், அதில் ரூ.196 கோடி இருப்பு வைத்துள்ளது குறித்து அவர் வருமானவரித்துறைக்குத் தகவல் அளிக்கவில்லை எனவும் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஜூலை, 2004- இல் தொடங்கப்பட்ட இந்த வங்கிக் கணக்கில் கேமேன் ஐலண்ட் தீவுகளைச் சேர்ந்த ஜிடபிள்யூ இன்வெஸ்ட்மென்ட் நிறுவனம் மூலம் பணம் மாற்றப்பட்டுள்ளது. ஆனால், 2005-06 ஆம் ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட ஐ.டி. ரிட்டர்னில் இந்தத் தகவலைத் தரணி கொடுக்கவில்லை.
இதுதொடர்பான வழக்கு அக்டோபர் 31, 2014 அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. ஆனால், அப்போது ஜெனீவாவின் எச்.எஸ்.பி.சி. வங்கியில் தனக்குக் கணக்கு இல்லை என்றும், ஜிடபிள்யூ முதலீட்டு வங்கியில் இயக்குநராகவோ அல்லது பங்குதாரராகவோ தான் இல்லை என்றும் கூறி ஒரு பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்தார். அவர் தன்னை ஒரு குடியுரிமை இல்லாத இந்தியர் எனக் குறிப்பிட்டு, எனவே தனக்கு வரிவிதிக்க முடியாது என்று கூறியிருந்தார்.
அதேநேரம் 2005-06 ஆம் ஆண்டிற்கான வருமான வரிக்கணக்கில் தரணி தனது ஆண்டு வருமானத்தை ரூ 1.7 லட்சம் என்று கூறியதோடு, அவர் பெங்களூரில் வசித்துவரும் வரி செலுத்தும் இந்தியர் எனக் குறிப்பிட்டிருந்தார். பிரமாண பத்திரத்தில் இந்தியர் அல்லாத வெளிநாட்டவர் என்றும், வரி படிவத்தில் இந்தியர் என்றும் தரணி குறிப்பிட்டிருந்ததைச் சுட்டிக்காட்டி, மும்பை வருமானவரித்துறை மேல் முறையீட்டு ஆணையம் (ஐ.டி.ஏ.டி.) அபராதத்துடன் வரி செலுத்துமாறு அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.