இந்திய நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 29ஆம் தேதி தொடங்கிய நிலையில், மழைக்கால கூட்டத்தொடரின் கடைசி நாளில் அவையின் மாண்பைக் குலைத்ததாகக் கூறி காங்கிரஸ், இடதுசாரிகள், சிவசேனா, திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 12 மாநிலங்களவை எம்.பிக்கள் குளிர்கால கூட்டத்தொடரிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
இந்த இடைநீக்கத்தைத் திரும்பப் பெற வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். மேலும், இடைநீக்கத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, எதிர்க்கட்சிகள் மாநிலங்களவையையும் தொடர்ந்து முடக்கிவருகின்றனர்.
இந்தநிலையில் இன்று (14.12.2021), 12 மாநிலங்களவை உறுப்பினர்களின் இடைநீக்கத்தை திரும்பப் பெறக் கோரி, நாடாளுமன்றத்தில் உள்ள காந்தி சிலையிலிருந்து விஜய் சௌக் வரை எதிர்க்கட்சி எம்.பிக்கள் அணி வகுப்பு நடத்தினர். இந்தப் பேரணிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, விவசாயிகளின் வருமானத்தைத் திருட நினைக்கும் சக்தியாலேயே 12 மாநிலங்களவை உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ராகுல் காந்தி, "12 எம்.பி.க்களின் இடைநீக்கம் இந்திய மக்களின் குரல் நசுக்கப்படுவதன் அடையாளம். அவர்களின் (எம்.பிக்களின்) குரல்கள் நசுக்கப்பட்டுள்ளன. அவர்கள் எந்த தவறும் செய்யவில்லை. நாடாளுமன்றத்தில் முக்கியமான பிரச்சனைகள் குறித்து விவாதிக்க எங்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. நாடாளுமன்றத்தில் அமளிக்கு மத்தியில், மசோதாவுக்குப் பின் மசோதாக்களாக நிறைவேற்றப்படுகிறது. இது நாடாளுமன்றத்தை நடத்துவதற்கான முறையல்ல. பிரதமர் அவைக்கு வருவதில்லை. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த எந்தவொரு பிரச்சனையையும் எழுப்ப எங்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. இது துரதிருஷ்டவசமான ஜனநாயக படுகொலையாகும்.
#WATCH Opposition MPs hold a march from Parliament to Vijay Chowk demanding to revoke the suspension of 12 Rajya Sabha MPs pic.twitter.com/EmBpZ311Go— ANI (@ANI) December 14, 2021
ஒரு அமைச்சர் விவசாயிகளைக் கொலைசெய்துள்ளார். பிரதமருக்கு அது தெரியும். உண்மை என்னவெனில், 2 - 3 முதலாளிகள் விவசாயிகளுக்கு எதிராக உள்ளார்கள். இந்த எம்.பி.க்கள் மாநிலங்களவை சபாநாயகராலோ பிரதமராலோ இடைநீக்கம் செய்யப்பட்டவர்கள் அல்ல, மாறாக விவசாயிகளின் வருமானத்தைத் திருட நினைக்கும் சக்தியால் இடைநீக்கம் செய்யப்பட்டவர்கள். பிரதமரும் மாநிலங்களவை சபாநாயகரும் அந்த சக்தி சொல்வதை நடைமுறைப்படுத்துபவர்கள் மட்டுமே" என கூறியுள்ளார்.