
கங்கை நதியில் கரைப்பதற்காக ஒரு உடலை சூட்கேஸில் இரண்டு பெண்கள் எடுத்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலம், வடக்கு கொல்கத்தாவின் குமார்துலியில் உள்ள கங்கை நதிக்கரைக்கு அருகே இன்று காலை, நீல நிற சூட்கேஸுடன் இரண்டு பெண்கள் சந்தேகத்திற்கிடமாக நடமாடியுள்ளனர். இதனை கண்ட அப்பகுதிகள், அவர்களை சுற்றி வளைத்து சூட்கேஸை திறந்து காட்டுமாறு கூறியுள்ளனர். அப்போது, அவர்கள் சூட்கேஸை திறக்க மறுத்துஅதில் செல்ல நாயின் எச்சங்கள் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
இதில் மேலும் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள், இது குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், பெண்களிடம் இருந்த சூட்கேஸை திறந்து பார்த்துள்ளனர். அதில், ஒரு பெண்ணின் உடல் ரத்தக்கறையோடு இருந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார், அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்துள்ளனர்.
அதில், ஃபால்குனி கோஷ் தனது கணவரை பிரிந்து தனது தாயார் ஆர்த்தி கோஷ் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஃபால்குனியின் மாமானாரின் சகோதரி சுமிதா கோஷ் (55) என்பவர் தனது கணவரை பிரிந்து கடந்த 11ஆம் தேதி முதல் கொல்கத்தாவில் உள்ள அவர்களது வீட்டில் தாய் - மகள் இருவருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று மாலை ஃபால்குனிக்கும் சுமிதாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஃபால்குனி, சுமிதாவை சுவர் மீது தள்ளியுள்ளார். இதில் சுமிதா மயக்கமடைந்தார். சுமிதா சுயநினைவு திரும்பியதும் அவர்களுக்குள் மீண்டும் சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஃபால்குனி, செங்கல்லை வைத்து சுமிதாவின் முகம் மற்றும் கழுத்தில் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில், சுமிதா ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
அதன் பின்னர், ஃபால்குனி கோஷும், தாய் ஆர்த்தி கோஷும் இணைந்து சுமிதாவின் உடலை சூட்கேஸில் வைத்து கங்கை நதியில் அப்புறப்படுத்த திட்டமிட்டுள்ளனர். அதன்படி, அந்த உடலை அப்புறப்படுத்த முயன்றபோது தாயும் மகளும் கையும் களவுமாக போலீசில் சிக்கியுள்ளனர் என்பது தெரியவந்தது. இதனையடுத்து, சுமிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தாயும் மகளையும் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.