
மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசுகையில், ''என்னுடைய மதுரை மேற்கு தொகுதியில் 22 வார்டுகள் இருக்கிறது. பல்வேறு வார்டுகளில் முல்லைப் பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு தோண்டப்பட்ட குழிகள் அப்படியே கிடக்கிறது. சரி படுத்தப்படவில்லை. முக்கியமான சாலைகள், பிரதான சாலைகள் எல்லாம் குண்டும் குழியுமாக இருக்கிறது. அதில் மாணவர்கள் பள்ளிக்கூடம் செல்வது சாகச நிகழ்ச்சி மாதிரி இருக்கிறது. பெரியவர்கள் சென்றால் எலும்பு முறிவு ஏற்படும். அந்த வகையில் குண்டும் குழியுமாக இருக்கிறது. மிகைப்படுத்தி சொல்கிறேன் என நினைக்க வேண்டாம் கர்ப்பிணி பெண்கள் சென்றால் செல்வதற்கிடையிலேயே பிரசவம் ஆகிவிடும். அந்த அளவிற்கு மதுரையில் சாலைகள் மோசமாக இருக்கிறது.
அதிமுக ஆட்சிக் காலத்தில் 1,296 கோடி ரூபாயில் கொண்டுவரப்பட்ட திட்டம் இந்த ஆட்சிக் காலத்தில் நத்தையை விட, ஆமையை விட மோசமாக நகர்ந்து வருகிறது. எழுத்துப்பூர்வமாக இதனை பல ஆணையாளர்களுக்கு எழுதிக் கொடுத்து விட்டோம். மூன்று ஆணையாளர்கள் இதுவரை மாறிவிட்டார்கள். ஒவ்வொரு ஆணையாளர்களையும் வரவேற்று எழுத்துப்பூர்வமாக கொடுக்கிறோம். ஆனால் குறைபாடு தீர்ந்தபாடில்லை. குப்பைகளாக காட்சியளிக்கிறது.
சட்டமன்றத்தில் 10 வருடம் அமைச்சராக இருந்தவர் மாமன்றத்தில் கலந்து கொள்ளலாமா? கலந்து கொண்டால் என்ன அர்த்தம் என்று கேட்டார்கள். என்னதான் ஊருக்கு ராஜாவாக இருந்தாலும் வீட்டுக்கு பிள்ளை தானே. மதுரை மக்கள் துன்பப்படுகிறார்கள். சிவாஜி கணேசன் நடித்த மனோகரா படத்தில் வருவது போல 'பொறுத்தது போதுமடா மகனே பொங்கி எழடா' என்று சிவாஜி சொல்லுவார். அது மாதிரி மதுரை மக்கள் படும் துன்பத்தை, துயரத்தை சொல்வதற்காக மாமன்றத்தை பயன்படுத்துவதில் தவறில்லை. இதில் நாம் பிரஸ்டீஜ் பார்ப்பது தேவையில்லாதது. மக்கள்தான் நம்மை பொறுத்தவரை எஜமானர்கள். அதைத்தான் எடப்பாடி பழனிசாமியும் சொல்லுகிறார். எனவே மக்கள் பிரச்சனைக்காக வந்திருக்கிறேன்'' என்றார்.