குஜராத் மாநிலம் மோர்பியில் சத்பூஜைக்காக ஆற்றைக் கடந்து கேபிள் பாலத்தில் மக்கள் சென்றபோது இடிந்து விழுந்து விபத்துக்கு உள்ளானது. ஆற்றில் மூழ்கிய பலரை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு நிவாரணத் தொகை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 142 ஆக உயர்ந்துள்ளது. தேடுதல் பணிகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இச்சம்பவம் குறித்து நேரில் கண்ட மக்கள் கூறுகையில், “நான் அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும் டீ விற்பேன். எல்லாம் ஓரிரு நொடிகளில் நிகழ்ந்து விட்டது. பாலத்தில் இருந்த மக்கள் தண்ணீரில் தவறி விழுந்ததைப் பார்த்தேன். நான் என்னால் முடிந்த உதவிகளை இரவு முதல் செய்து கொண்டு இருக்கிறேன். ஏழு மாத கர்ப்பிணி பெண் பாலம் உடைந்ததில் உயிரிழந்ததைக் கண்டதும் என் மனம் உடைந்துவிட்டது.
இது போல் நான் கண்டதே இல்லை. தண்ணீரில் மாட்டிய ஒரு பெண் குழந்தையைக் காப்பாற்ற முயற்சித்தோம். அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்குள் என் கண் முன்னாலேயே உயிரிழந்து விட்டாள்” எனக் கூறினார்.
இது குறித்து பெண் ஒருவர் கூறுகையில், “காலை வரை என்னால் இதை நம்ப முடியவில்லை. நானும் என் குடும்பத்தினரும் இரவு முழுவதும் மக்களை மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்வதில் உதவி செய்து கொண்டு இருந்தோம். மக்களை அழைத்துச் செல்ல என் இரு வாகனங்களையும் கொடுத்துள்ளேன். உண்மையில் நான் நொறுங்கிப் போயுள்ளேன். இதற்கு மேல் என்னால் எதையும் பேச முடியாது” எனக் கூறினார்.