
வரதட்சணை கேட்டு வற்புறுத்தியதால், கணவரின் வீட்டின் முன்பு தனது குடும்பத்துடன் பெண் ஒருவர் கூடாரம் அமைத்து போராடிய சம்பவம் பேசுபொருளாகியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், முஷாஃபார்நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஷாலினி சிங்கால் என்ற இளம்பெண். எல்.எல்.பி பட்டப்படிப்பு முடித்த இவருக்கு, பிரனவ் சிங்காலுடன் கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்தவுடன், பாலி, இந்தோனிசியா ஆகிய இடங்களுக்கு புதுமண தம்பதி தேனிலவுக்குச் சென்றுள்ளனர்.
தேனிலவு முடிந்த பிறகு, ஷாலினி தனது பெற்றோரை பார்ப்பதற்காக தனது வீட்டிற்கு வந்துள்ளார். பெற்றோரை பார்த்துவிட்டு, தனது கணவரின் வீட்டிற்கு போனபோது, அங்கு வீடு பூட்டப்பட்டிருந்தது. மீண்டும் வீட்டிற்கு வரவேண்டுமென்றால் 50 லட்சம் வரதட்சணை கொடுக்க வேண்டும் என்று மாமியார் ஷாலினியை வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த ஷாலினி, கணவனின் வீட்டு முன்பு தனது குடும்பத்துடன் கூடாரம் அமைத்து கொண்டு போராட்டம் செய்துள்ளார்.
2 நாள்களாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருவதால், இந்த விவகாரம் மாநிலத்தில் எதிரொலித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் ஷாலினி கூறியதாவது, “எனக்கு சுயமரியாதை இருக்கிறது. எனது அப்பா மிகவும் கஷ்டப்பட்டு இந்த திருமணத்தை முடித்துள்ளார். ஆனால், எனது மாமியார் 50 லட்சம் வரதட்சணை கேட்டு வற்புறுத்துகிறார். 50 லட்சம் ஒன்றும் சிறிய அளவு பணம் கிடையாது. தேனிலவு முடிந்த பிறகு, எனது கணவரின் நடவடிக்கைகள் முற்றிலும் மாறிவிட்டது. திருமணத்திற்கு பிறகு, மாமியார் மற்றும் அவரது உறவினர்கள் என்னை கைவிட நினைக்கின்றனர். என்னை வீட்டிற்கு நுழைய அனுமதிக்காவிட்டால், இந்த கேட் முன்பே தற்கொலை செய்துகொள்வேன்” என்று தெரிவித்துள்ளார்.
இளம்பெண் போராட்டம் நடத்தி வரும் இடத்துக்கு போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், முன்னாள் எம்.எல்.ஏ உமேஷ் மாலிக் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.