டிஸ்கவரி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் Man vs Wild நிகழ்ச்சி உலகம் முழுவதும் மிகவும் பிரபலமானதாகும்.
இதற்கான மிக முக்கிய காரணம் இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பியர் கிரில்ஸ். எதாவது ஒரு மோசமான சூழ்நிலையில் ஒரு மனிதன் தனித்து விடப்பட்டால், எப்படி உயிரை காத்து அங்கிருந்து தப்பிப்பது என்பதை விளக்கும் நிகழ்ச்சியான இது பல இளைஞர்களையும் கவர்ந்தது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா போன்ற பல அரசியல் பிரபலங்கள் மற்றும் திரை பிரபலங்கள் பலர் கலந்துகொண்டுள்ளனர். அந்த வகையில் தற்போது இந்திய பிரதமர் மோடி இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.
ஆகஸ்ட் 12-ம் தேதி இரவு 9 மணிக்கு பிரதமர் மோடி கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பானது. அப்போது அந்த நிகழ்ச்சியில் பேசிய மோடி, “18 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் இது தான் தனது முதல் விடுமுறை” என்றார்.
இதனையடுத்து இயற்கை குறித்து பேசியவர், “இமயமலைக்கு பயணம் மேற்கொள்ளும் போது ஆன்மீகம் மட்டுமின்றி இயற்கையின் அதிசயமும் தன்னை வியக்க வைக்க தவறுவதில்லை” என்று கூறினார். பின்னர் பியர் கிரில்ஸ் ஒரு கட்டத்தில் மோடியை பார்த்து, பதற்றத்தை உணர்கிறீர்களா என்று கேட்கையில் அதற்கு அவர் சிரித்துக் கொண்டே, “என் வாழ்க்கையில் ஒருபோதும் பதற்றத்தை உணர்ந்தது இல்லை” என்று கூறினார்.