Skip to main content

இந்திய மக்களை உளவு பார்க்கும் மோடி அரசு;  வெளியான அதிர்ச்சி தகவல்

Published on 31/08/2023 | Edited on 31/08/2023

 

Modi government spying on Indian people

 

140 கோடி இந்திய மக்களின் தரவுகள் மற்றும் தகவல்தொடர்புகளை  மோடி அரசு கண்காணிப்பு கருவிகளை கொண்டு  உளவு பார்த்து வருவதாக லண்டனில் உள்ள ஆங்கில பத்திரிக்கை ஒன்று குற்றச்சாட்டு வைத்துள்ளது.

 

இந்தியாவில் கடந்த 2019ஆம் ஆண்டு, எதிர்க்கட்சித் தலைவர்கள், பத்திரிக்கையாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் முக்கிய தொழிலதிபர்கள் ஆகியோரின் செல்போனில் இருந்து  அவர்களின் தரவுகளை மோடி அரசு உளவு பார்த்து வருவதாக பரபரப்பு புகார் எழுந்து நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை இஸ்ரேலில் என்.எஸ்.ஓ நிறுவனம் தயாரித்த பெகாசஸ் உளவு மென்பொருளை பயன்படுத்தி உளவு பார்ப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால், அந்த குற்றச்சாட்டை மோடி தலைமையிலான மத்திய அரசு மறுத்துவிட்டது. 

 

இதற்கிடையே, காங்கிரஸ் முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தியின் செல்போனை மோடி அரசு ஒட்டுக்கேட்பதாகவும்,  ராகுல் காந்தி குற்றச்சாட்டு வைத்திருந்தார். மேலும், அப்போது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரிலும் எதிர்க்கட்சியினர் பெகாசஸ் உளவு மென்பொருள் குறித்து கேள்வி எழுப்பினர். ஆனால், அதற்கு மோடி அரசு பதில் எதுவும் தெரிவிக்காமல் நாடாளுமன்றத்தை ஒத்திவைத்தது.

 

இந்த நிலையில், லண்டனில் உள்ள பைனான்ஸ் டைம்ஸ் என்ற ஆங்கில பத்திரிகை ஒன்றில், இந்தியாவில் உள்ள 140 கோடி இந்தியர்களையும் மோடி அரசு உளவு பார்ப்பதாக செய்தி வெளியிட்டுள்ளது. அதில், இஸ்ரேலை தலைமையாகக் கொண்டு செயல்பட்டு வரும் செப்டியர் மற்றும் காக்னைட் என்ற நிறுவனத்திடமிருந்து மோடி அரசு அதிநவீன உளவுக் கருவி வாங்கியுள்ளது. அந்தக் கருவிகளை கடலுக்கு அடியில் உள்ள கேபிள்கள் மற்றும் கண்காணிப்பு உபகரணங்களில் பொறுத்தி மக்களின் தரவுகள் திருடப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளது. அதை வைத்து, ஒட்டுமொத்த 140 கோடி இந்திய மக்களின் செல்போன் அழைப்புகள், வாட்ஸ்அப் செய்திகள், குறுந்தகவல்கள், ஈ.மெயில்கள், ஆகிய தரவுகள் திருடப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

 

அதேபோல், பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் இணைய தகவல்கள் முதற்கொண்டு இந்த கருவி முலம் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அந்த செய்தியில் குறிப்பிட்டுள்ளது. மேலும், இஸ்ரேல் நாட்டின் செப்டியர் நிறுவனம் தனது உளவு பார்க்கும் தொழில்நுட்பத்தை  முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ, வோடபோன் ஐடியா, மற்றும் சிங்கப்பூரின் சிங்டெல் உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு விற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. 

 

 

 

 

சார்ந்த செய்திகள்