அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.7 ஏக்கர் நிலம் யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பான தீர்ப்பை உச்சநீதிமன்ற தலைமைநீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 பேர் கொண்ட அமர்வு வழங்கியுள்ளது.
இந்த தீர்ப்பின்படி, வக்பு வாரியத்திற்கு அவர்கள் விரும்பும் இடத்தில் 5 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் எனவும், வழக்குக்கு உட்படுத்தப்பட்ட இடத்தில் ராமர் கோவில் கட்டுவதற்கான அமைப்பை அடுத்த 3 மாதத்தில் மத்திய அரசு ஏற்படுத்த வேண்டுமெனவும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, "அயோத்தியா மீதான தீர்ப்பை நாட்டின் உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்த முடிவை யாருடைய வெற்றியாகவோ தோல்வியாகவோ பார்க்கக்கூடாது. அமைதி, நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையை பேண வேண்டும் என்பதே நாட்டு மக்களுக்கு எனது வேண்டுகோள். ஒரு சர்ச்சையைத் தீர்ப்பதில் சட்ட நடைமுறைகளைப் பின்பற்றுவது எவ்வளவு முக்கியம் என்பதை இது காட்டுகிறது.ஒவ்வொரு தரப்பினருக்கும் அவர்களின் வாதங்களை முன்வைக்க போதுமான நேரமும் வாய்ப்பும் வழங்கப்பட்டது. இந்த முடிவு நீதித்துறை செயல்முறைகளில் சாமானிய மக்களின் நம்பிக்கையை மேலும் பலப்படுத்தும். நம் நாட்டின் ஆயிரக்கணக்கான ஆண்டுகளின் சகோதரத்துவ மனப்பான்மைக்கு ஏற்ப, 130 கோடி இந்தியர்களுக்கு அமைதியையும் கட்டுப்பாட்டையும் அறிமுகப்படுத்த வேண்டும்" றன தெரிவித்துள்ளார்.