இந்தியா மட்டுமின்றி உலகையே ஆட்டிப்படைத்துவரும் கரோனா பல்வேறு பாதிப்புகளையும், உயிரிழப்புகளை ஏற்படுத்திவருகிறது. கரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு மருந்து தயாரிக்கும் முயற்சிகள் ஒருபக்கம் நடந்து வர, கரோனா பரவலைத் தடுத்து நிறுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகளும் நடைபெற்றுவருகின்றன.
இந்தநிலையி0, லேசான கரோனா பாதிப்பு, நீடித்த நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குவதாக அமெரிக்க ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. வாஷிங்டன் யுனிவர்சிட்டியின் ஸ்கூல் ஆஃப் மெடிசின் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது. லேசான கரோனா பாதிப்பு ஏற்படும்போது, ஆன்டிபாடிகளை உருவாக்கும் நோய் எதிர்ப்பு செல்கள், வேகமாகப் பெருகி இரத்தத்தில் பரவுகின்றன. இதனால் இரத்தத்தில் ஆன்டிபாடி அளவு அதிகமாகிறது. அந்த நோய்த்தொற்று குணமடைந்தவுடன், பெரும்பாலான நோய் எதிர்ப்பு செல்கள் இறந்துவிடுகின்றன. இதனால் இரத்தத்தில் ஆன்டிபாடியின் அளவு குறைகிறது. ஆனாலும் ஆன்டிபாடிகளை உற்பத்தி செய்யும் சிறிய அளவிலான செல்கள், எலும்பு மஜ்ஜைக்குள் நுழைவதுடன், அங்கிருந்து இரத்த ஓட்டத்தில் சுரக்கின்றன என அந்த ஆய்வு கூறுகிறது.
லேசான கரோனா பாதிப்பின் அறிகுறிகள் தெரிய ஆரம்பித்த 11 மாதங்கள் கழித்தும், இவ்வாறான ஆன்டிபாடிகள் சுரப்பதாக கூறும் ஆராச்சியாளார்கள், வாழ்நாள் முழுவதும் இவ்வாறான ஆன்டிபாடிகள் சுரக்குமென்றும், இது நீடித்த நோய் எதிர்ப்பு சக்திக்குச் சான்று என்றும் கூறுகின்றனர். இந்த ஆய்வின் முடிவினைக்கொண்டு, மேலும் திறன்மிக்க தடுப்பூசியை உருவாக்கலாம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.