யோகா, நேச்சுரோபதி மருத்துவர்களுக்கான ஆன்லைன் பயிற்சியின்போது, இந்தி தெரியவில்லை என்றால் வெளியேறுங்கள் என ஆயுஷ் அமைச்சக செயலாளர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுஷ் அமைச்சகம் மற்றும் மொராஜி தேசாய் தேசிய யோகா நிறுவனம் இணைந்து கடந்த 18 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை யோகா, நேச்சுரோபதி மருத்துவர்களுக்கான ஆன்லைன் பயிற்சி வழங்கின. இதில் தமிழகத்திலிருந்து 37 மருத்துவமனைகளைச் சேர்ந்த மருத்துவர்கள் உட்பட நாடு முழுவதிலும் இருந்து 350க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியின்போது, ஆயுஷ் அமைச்சக செயலாளர் ராஜேஷ் கொடேஜா இந்தியில் பேசியுள்ளார். அப்போது, இந்தி தெரியாத மருத்துவர்கள் ஆங்கிலத்தில் பேச கூறியுள்ளனர். ஆனால், "இந்தி தெரியவில்லை என்றால் வெளியேறுங்கள்" என வகுப்பில் பங்கேற்ற மருத்துவர்களிடம் ராஜேஷ் கொடேஜா தெரிவித்துள்ளார். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் பரவி சர்ச்சையாகியுள்ளது.