மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் நேற்று தொடங்கி மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. 7 கட்ட தேர்தலும் முடிந்த பிறகு மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் உத்தரபிரதேசத்தின் சுல்தான்பூர் தொகுதியில் போட்டியிடும் பாஜக -வின் மேனகா காந்தி நேற்று அங்கு பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது இஸ்லாமிய சமூகத்தினர் தனக்கு வாக்களிக்கத் தவறிவிட்டால், அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் நான் கவனம் செலுத்தமாட்டேன் என கூறினார். இது தற்போது சர்ச்சையாகியுள்ளது.
இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் ஒரு பகுதியில் நடந்த இந்த கூட்டத்தில் பேசிய அவர், "நான் ஏற்கனவே இந்த தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டேன், இப்போது நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். மக்களின் ஆதரவும் அன்பும் காரணமாக நான் எப்படியும் வென்றுவிடுவேன். ஆனால் என்னுடைய வெற்றியில் இஸ்லாமியர்கள் பங்கு இல்லாமல் இருந்தால், நான் அதை நன்றாக உணர மாட்டேன். எனக்கு வாக்களிக்காத ஒரு இஸ்லாமியர் பிறகு எதாவது வேலை என என்னிடம் வந்தால், அது எப்படி இருக்கும் என்று நான் யோசிக்கிறேன். இது எல்லாமே ஒருவகை கொடுக்கல் வாங்கல் தான். நீங்கள் இருந்தாலும் இல்லை என்றாலும் நான் தேர்தலில் வெற்றி பெறுவேன். ஆனாலும் உங்கள் நலன் கருதி நீங்கள் தான் எனக்காக பேச வேண்டும்" என கூறினார். பொது மேடையில் இஸ்லாமியர்களை மிரட்டும் வகையில் அவர் பேசிய வீடியோ வைரலானதை தொடர்ந்த இது தற்போது பாஜக வுக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.