ஆப்பிரிக்காவில் பரவி வரும் குரங்கம்மை நோய் பரவலை அடுத்து அவசர நிலையை அறிவித்துள்ளது உலக சுகாதார அமைப்பு. இந்நிலையில் தமிழக பொது சுகாதாரத்துறை சார்பில் மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள தகவலின்படி ஆப்பிரிக்காவில் அதிகமாக குரங்கம்மை பரவி வரும் நிலையில், சுவீடன் நாட்டிலும் பலருக்கு குரங்கம்மை பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. காங்கோ மற்றும் மத்திய ஆப்பிரிக்காவில் இருந்து வருபவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழக பொது சுகாதாரத்துறை சார்பில் மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு கொடுக்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறையில், 'குரங்கம்மை பாதிப்பு உள்ளவர்கள் என சந்தேகம் இருந்தால் உடனடியாக தெரிவிக்க வேண்டும்; பயணிகளுக்கு வெப்பநிலை பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்; பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து வந்தவர்களைக் கண்டறிய வேண்டும்; அறிகுறிகள் இருப்பவர்கள் மருத்துவமனைக்கு அனுமதிக்கப்படுவதற்கான பரிந்துரைக்கான ஏற்பாடுகளை வலுப்படுத்த வேண்டும்; யாருக்காவது குரங்கம்மை பாதிப்பு இருப்பதாக கண்டறியப்பட்டால் இதுகுறித்து விமான நிறுவனத்திடம் தெரிவிக்க வேண்டும்' என வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளது.