கரோனா வைரஸில் இருந்து மீண்ட ஒருவரை பல கிலோ மீட்டர் ஆட்டோ ஓட்டிச்சென்று அவருடைய வீட்டில் சேர்த்த பெண் ஆட்டோ ஓட்டுநரை அனைவரும் பாராட்டி வருகிறார்கள். மணிப்பூர், கம்ஜாங் மாவட்டத்தில் கரோனா சிறப்பு வார்டு செயல்பட்டு வருகின்றது. அங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவர் குணமாகி வீட்டிற்கு செல்ல ஆயத்தமாகி உள்ளார். அவர் வீடு பக்கத்து மாவட்டத்தில் இருந்ததால் அவருக்கு மருத்துவமனை நிர்வாகம் ஆம்புலன்ஸ் வசதியை செய்து தர மறுப்பு தெரிவித்துள்ளது.
இதனால் அவர் என்ன செய்வது என்று தெரியாமல் வருத்தத்தில் மருத்துவமனையில் இருந்துள்ளார். இதை கேள்விப்பட்ட லய்பி என்ற பெண் ஆட்டோ ஓட்டுநர் அவருக்கு உதவ முன்வந்துள்ளார். அவரை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு பயணிக்க ஆரம்பித்த அவர் சுமார் எட்டு மணி நேர பயணத்திற்கு பிறகு கரோனாவில் இருந்து மீண்டவரை அவரது வீட்டில் கொண்டு சேர்ந்துள்ளார் லய்பி. இந்த சம்பவம் அம்மாநிலத்தில் வைரலானது. இதை கேள்விப்பட்ட அம்மாநில முதல்வர் பிரேன் சிங் அவரை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.