உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 15 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது. 88 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 150-க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். 5000க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

தற்போது வெளியாகி இருக்கும் புகைப்படம் ஒன்றில், விவசாயி ஒருவரின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. கர்நாடக மாநிலம் மரனசகஹள்ளியை சேர்ந்த விவசாயி ஒருவர் சந்தையில், தான் விற்ற காய்கறிகள் மூலம் கிடைத்த பணத்தை சோப்பு போட்டு கழுவி உள்ளார். கரோனா அச்சம் உச்சத்தில் இருப்பதால் ரூபாய் நோட்டுக்களில் இருந்து கரோனா தொற்று ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகதான் இவ்வாறு செய்ததாக அவர் விளக்கமளித்துள்ளார். அவர் ரூபாய் நோட்டுக்களை கழுவும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகின்றது.