Skip to main content

மம்தா பானர்ஜி-பிரசாந்த் கிஷோர் மோதல்?

Published on 08/02/2022 | Edited on 08/02/2022

 

prashant kishor

 

மேற்கு வங்க மாநிலத்தின் ஆளும் கட்சியான திரிணாமூல் காங்கிரஸின் தேர்தல் வியூக அமைப்பாளராக பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக் நிறுவனம் கடந்த 2019 ஆம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வருகிறது. இந்தச்சூழலில் கடந்தாண்டு நடைபெற்ற மேற்குவங்க சட்டமன்ற தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் மாபெரும் வெற்றியை ஈட்டியதை தொடர்ந்து கோவா, திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் தனது கட்சியை வளர்க்கும் பொறுப்பை மம்தா ஐ-பேக் நிறுவனத்திடம் ஒப்படைத்தார்.

 

இந்தநிலையில் கடந்தாண்டு இறுதியில் மம்தாவுக்கும்-பிரசாந்த் கிஷோருக்கும் மோதல் வெடித்ததாக தகவல் வெளியானது. பிரசாந்த் கிஷோர் தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ள முயன்றதாக மம்தா கருதியது இந்த மோதலுக்கு ஒரு காரணமாக கூறப்பட்டது. கடந்தாண்டு மம்தா, காங்கிரஸ் இல்லாத எதிர்க்கட்சி கூட்டணியை உருவாக்க முயற்சி செய்தார். ஆனால் காங்கிரஸ் இல்லாத எதிர்க்கட்சி கூட்டணி சாத்தியமில்லை என தேசியவாத காங்கிரஸ், சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் அறிவிக்க அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. பிரசாந்த் கிஷோரின் அறிவுரையை கேட்டே அப்படியொரு முயற்சியை மம்தா செய்ததாகவும், அம்முயற்சி படுதோல்வியடைந்ததால் மம்தா பிரசாந்த் கிஷோர் மீது கோபம் கொண்டதும் இருவருக்குமிடையேயான மோதலுக்கான இன்னொரு காரணம் என கூறப்பட்டது. ஆனால் இதனை திரிணாமூல் காங்கிரஸ் மறுத்தது.

 

இந்தநிலையில் தற்போது மீண்டும் மம்தாவுக்கும்-பிரசாந்த் கிஷோருக்கும் மோதல் வெடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேற்குவங்க அமைச்சர்கள், அரசு துறையில் ஐ-பேக்கின் தலையீட்டை விரும்பவில்லை என கூறப்படுகிறது. இதற்கிடையே கடந்த வெள்ளிக்கிழமை, மம்தா அங்கீகரித்த 108 நகராட்சி அமைப்புகளுக்கான திரிணாமூல் காங்கிரஸின் வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளரும், தேசிய துணை தலைவரும் வெளியிட்ட நேரத்தில், மம்தாவால் அங்கீகரிக்கப்படாத இன்னொரு வேட்பாளர் பட்டியல் கட்சியின் சமூகவலைத்தள பக்கங்களில் வெளியானது. இந்த பட்டியலை ஐ-பேக் வெளியிட்டதாக கூறப்படுகிறது. இது கட்சிக்குள் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கட்சி தலைவர்கள் பிரசாந்த் கிஷோர் மீது அதிருப்தியடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே வேட்பாளர் பட்டியல் தொடர்பாக கட்சி தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து திரிணாமூல் காங்கிரஸ், வேட்பாளர் பட்டியல் சம்பந்தமான கட்சி தொண்டர்களின்  குறையை தீர்க்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளது.

 

இந்தச்சூழலில் பிரசாந்த் கிஷோர், ஐ-பேக் மேற்குவங்கம், மேகாலயா, திரிபுரா ஆகிய மாநிலங்களில் திரிணாமூல் காங்கிரஸுக்காக பணியாற்ற விரும்பவில்லை என மம்தாவுக்கு குறுந்செய்தி அனுப்பியதாகவும், அதற்கு மம்தா நன்றி என பதிலளித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் திரிணாமூல் காங்கிரஸ்-ஐபேக் ஒப்பந்தம் முறிவு குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் எனவும் கூறப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்