மேற்கு வங்கத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று வருகிறது. முதல் கட்டத் தேர்தல், கடந்த 27ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. இரண்டாம் கட்ட தேர்தல் நாளை (ஏப்ரல் 1) நடைபெறவுள்ளது. இந்த இரண்டாம் கட்ட தேர்தலில் மம்தா பானர்ஜியும், மம்தாவின் கட்சியிலிருந்து பிரிந்து சென்று பாஜகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் சுவேந்து அதிகாரியும் நேருக்கு நேராக மோதும் நந்திகிராம் தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
இந்தநிலையில், முதற்கட்ட தேர்தல் நடைபெற்ற கடந்த 27ஆம் தேதி, தொலைபேசி உரையாடல் ஒன்று வெளியாகி வைரலானது. அந்த உரையாடலில், மம்தா பானர்ஜி தனது கட்சியிலிருந்து சுவேந்து அதிகாரியுடன் பாஜகவிற்கு சென்ற பிரலே பால் என்ற தலைவரிடம், நந்திகிராமில் வெல்ல உதவுமாறு கேட்பது போலவும், அதற்கு அவர் மறுப்பு தெரிவிப்பது போலவும் பதிவாகியிருந்தது.
இதனைத் தொடர்ந்து பாஜக, இந்த உரையாடல் குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகாரளித்தது. அப்புகாரில், மம்தா பானர்ஜி, தனது பதவியைப் பயன்படுத்தி தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாக பாஜக கூறியிருந்தது. இந்தநிலையில், நேற்று (30.03.2021) மம்தா பானர்ஜி, பாஜக தலைவருடன் பேசியதை ஒப்புக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர், “நான் நந்திகிராமில் உள்ள பாஜக தலைவரை தொலைபேசியில் அழைத்தேன். யாரோ ஒருவர் என்னுடன் பேச விரும்புகிறார்கள் என தகவல் கிடைத்தது. எனவே அவருடன் பேசினேன். நான் அவரிடம் உடல்நிலையைக் கவனித்துக்கொள்ளுமாறும், நன்றாக இருக்குமாறும் கூறினேன். இதில் எனது குற்றம் என்ன?. தொகுதியின் வேட்பாளராக, எந்தவொரு வாக்காளரின் உதவியையும் என்னால் பெற முடியும், நான் யாருக்கு வேண்டுமானாலும் அழைப்பு விடுக்கமுடியும். அதில் எந்தவொரு தீங்கோ, குற்றமோ இல்லை. ஆனால் யாராவது உரையாடலைப் பரப்பினால் அது கிரிமினல் குற்றமாகும். எனது உரையாடலைப் பரப்பிய நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, என் மீதல்ல" எனக் கூறியுள்ளார்.
மம்தா பானர்ஜி, நந்திகிராமில் வெல்ல உதவி கேட்டதை ஒப்புக்கொண்டுள்ளது, அந்த கட்சியை சேர்ந்தவர்களையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.