புதுச்சேரி லூயிஸ் பிரகாசம் வீதியில் வசிப்பவர் பாபுலால். இவர் தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ், புகையிலை போன்ற போதைப் பொருட்களை சட்டத்திற்குப் புறம்பாக பதுக்கிவைத்து வியாபாரம் செய்துவந்துள்ளார். இதுகுறித்த தகவல் பெரியகடை காவல் நிலையத்திற்கு கிடைத்ததையடுத்து, காவல் கண்காணிப்பாளர் ஜிந்தா கோதண்டராமன் உத்தரவின்பேரில் பெரியகடை ஆய்வாளர் கண்ணன், எஸ்.டி.எஃப் ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் சம்பந்தப்பட்ட வீட்டிற்குச் சென்று சோதனை செய்தனர்.
அப்போது வீட்டில் சுமார் 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான தடைசெய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ், புகையிலை போன்ற போதைப் பொருட்கள் 58 பார்சலில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. தொடர்ந்து அந்த வீட்டின் உரிமையாளர் பாபுலால், போதைப் பொருட்களை விற்பனைக்காக பெங்களூருவில் இருந்து கடத்திவந்த சுரேஷ், வாங்க வந்த சுமன் ஆகியோரைக் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து 8 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம், 2 கார்கள், 2 மோட்டார் சைக்கிள்கள், செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்களின் செல்ஃபோனை ஆய்வுசெய்ததில், பெரியகடை போலீஸ் நிலையத்தைச் சார்ந்த ASI ராமலிங்கம், காவலர் பிரபாகரன் ஆகியோர் குற்றவாளியின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற புகைப்படத்தை கண்டறிந்தனர்.
அதைத் தொடர்ந்து காவல்துறை உயரதிகாரிகளின் உத்தரவின்படி, அந்த 2 போலீசாரை ஆயுதப்படை பிரிவிற்குப் பணியிட மாற்றம் செய்தனர். போதைப் பொருட்களைப் பதுக்கிவைத்து விற்பனை செய்த குற்றவாளியின் பிறந்தநாளில் பங்கேற்ற 2 காவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருப்பது காவல்துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.