எனது வாழ்வில் 'அம்பன்' போன்ற ஒரு புயலைப் பார்த்ததே இல்லை என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
புதன்கிழமை மாலை மேற்குவங்கத்தில் கரையேறிய 'அம்பன்' சூப்பர் புயல், அம்மாநிலத்தையே புரட்டி போட்டுள்ளது எனலாம். புதன்கிழமை மதியம் தொடங்கி சுமார் நான்கு மணிநேரம் கரையைக் கடந்த இந்தப் புயல், அம்மாநிலத்தின் பெரும்பகுதியை நாசமாக்கிச் சென்றுள்ளது. மேலும், இரவு முழுவதும் பெய்த கனமழையால் பல இடங்கள் நீரில் மூழ்கியுள்ளன. கடந்த 1,999 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தியா சந்தித்த முதல் சூப்பர் புயலான இது ஆயிரக்கணக்கான வீடுகள் மற்றும் லட்சக்கணக்கான மரங்களை அழித்துள்ளது. இப்புயலால் ஏற்பட்ட சேதத்தை இன்று நேரில் ஆய்வு செய்த பிரதமர் மோடி, சீரமைப்பு பணிகளுக்காக உடனடியாக 1,000 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இந்தப் புயல் குறித்துப் பேசியுள்ள மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, "இதுபோன்ற ஒரு புயலை என் வாழ்வில் இதுவரை நான் பார்த்தது இல்லை. ஒரு தேசியப் பேரிடரைவிட அதிகமான சேதம் என்றுதான் இதனைக் குறிப்பிட வேண்டும். இதிலிருந்து மீண்டு இயல்புநிலை திரும்பச் சிறிது காலம் ஆகும். ஏறக்குறைய 8 மாவட்டங்களைப் புயல் சீரழித்துவிட்டது. 60 சதவீத மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 6 கோடி மக்கள் இதனால் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநில அரசும், அதிகாரிகளும் இரவு பகல் பாராமல் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்கள். பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சனிக்கிழமை நான் நேரடியாகச் செல்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.