உலக அளவில் சினிமா துறையின் மிக உயரிய விருதான ஆஸ்கர் விருது பெற்ற ஆர்.ஆர்.ஆர் மற்றும் 'தி எலிஃபெண்ட் விஸ்பெரர்ஸ்' இரு படக்குழுவினருக்கும் மாநிலங்களவை இன்று தொடங்கியதும் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. அப்போது முதலில் பேசிய மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் 'தி எலிஃபெண்ட் விஸ்பெரர்ஸ்' ஆவணப்படத்தின் மூலம் இரண்டு பெண்கள் இந்தியாவிற்கு ஆஸ்கர் விருது பெற்றுக் கொடுத்திருப்பது பெருமைக்குரியது எனத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பேசிய நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “ஆஸ்கர் விருது பெற்ற இருதரப்பினரை வாழ்த்துவதில் நானும் இணைந்து கொள்கிறேன். விருது பெற்ற இருவரும் தென்னிந்தியாவை சேர்ந்தவர்கள். அது பெருமையாக உள்ளது. ஆனால் ஒரே ஒரு கோரிக்கையை மட்டும் வைத்துக் கொள்கிறேன். இந்த வெற்றியை பாஜகவினர் உரிமை கொண்டாடிவிடக் கூடாது. நாங்கள் தான் தயாரித்தோம் என்றோ, நாங்கள் தான் பாடல் எழுதினோம் என்றோ, நாங்கள் தான் கதை எழுதினோம் என்றோ, குறிப்பாக மோடிதான் இந்த படங்களை இயக்கினார் என்று நீங்கள் சொல்லிவிடக் கூடாது. இது இந்திய நாட்டின் பங்களிப்பு” என்றார். இது மாநிலங்களவையில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.
அதன்பிறகு பேசிய நரசிம்ம ராவ், “ஆர்.ஆர்.ஆர் படம் தெலுங்கில் எடுத்த படம். அவர்களுக்கு விருது கிடைத்ததை நினைத்து நான் பெருமைப்படுகிறேன்” என்று கூற, அடுத்து பேசிய மதிமுக தலைவர் வைகோ, “தமிழ்நாட்டை சேர்ந்த ஏ.ஆர்.ரகுமானுக்கு பிறகு இந்தியாவிற்கு ஆஸ்கர் விருது வாங்கி கொடுத்தவர்களுக்கு வாழ்த்துக்கள்” என்றார்.