மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் இன்று (27.11.2019) மாலைக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும், அந்த நிகழ்வை நேரடியாக தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்ப வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் பாஜக கட்சிக்கு பெரும்பான்மை இல்லாததால், நம்பிக்கை வாக்கெடுப்பை தவிர்த்த தேவேந்திர பட்னாவிஸ் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். பட்னாவிஸுக்கு முன்பாகவே துணை முதல்வர் பதவியை அஜித் பவார் ராஜினாமா செய்தார்.
அதை தொடர்ந்து மும்பையில் பாஜக எம்.எல்.ஏக்களுடன் முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆலோசனை மேற்கொண்டார். துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்த தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அஜித் பவார், கட்சியின் தலைவர் சரத்பவார் இல்லத்திற்கு சென்று சரத்பவாரை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.
இதனிடையே மும்பையில் நட்சத்திர ஹோட்டலில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏக்களின் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே சட்டமன்ற குழு தலைவராகவும், மகாராஷ்டிரா மாநில முதல்வராகவும் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார்.
மேலும் கூட்டணி கட்சிகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு குழுவும் (மகா விகாஸ் அகாதி) அமைக்கப்பட்டது. எம்.எல்.ஏ கூட்டத்திற்கு பிறகு மகாராஷ்டிரா ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியை சந்தித்த மகா விகாஸ் அகாதி தலைவர்கள் உத்தவ் தாக்கரே தலைமையிலான ஆட்சி அமைக்க உரிமை கோரினர். அப்போது கூட்டணி எம்.எல்.ஏக்களின் ஆதரவு கடிதத்தையும் ஆளுநரிடம் வழங்கினர்.
நவம்பர் 28- ஆம் தேதி சிவாஜி பூங்காவில் மகாராஷ்டிரா மாநில முதல்வராக உத்தவ் தாக்கரே பதவியேற்க உள்ளார். முன்னதாக பதவியேற்பு விழா டிசம்பர் 1- ஆம் தேதி நடைபெறவிருந்த நிலையில், தற்போது நவம்பர் 28- ஆம் தேதிக்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தாக்கரே குடும்பத்தில் இருந்து முதல் முதலமைச்சராக பதவியேற்க உள்ளார். அதேபோல் சிவசேனா கட்சியை சேர்ந்த ஒருவர் முதன்முறையாக மகாராஷ்டிரா மாநில முதல்வராக பதவியேற்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டதை தொடர்ந்து உத்தவ் தாக்கரே, தனது தந்தையும், சிவசேனா கட்சியின் நிறுவனருமான பால் தாக்கரே இல்லத்திற்கு சென்று, அவரின் உருவ படத்திற்கு அஞ்சலி செலுத்தினார்.