இந்தியாவில் கடந்த ஆண்டு ஏற்பட்ட கரோனா பரவலைத் தொடர்ந்து, மத்திய அரசு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத் தொகுதி மேம்பாட்டு நிதி வழங்குவதைத் தற்காலிகமாக ரத்து செய்தது. மேலும், தொகுதி மேம்பாட்டுக்கு ஒதுக்க வேண்டிய நிதி, சுகாதார சேவைகளைக் கையாளுவதற்கும், கரோனாவால் ஏற்பட்ட பாதிப்பை சரி செய்வதற்கும் பயன்படுத்தப்படும் எனவும் மத்திய அரசு தெரிவித்தது.
மத்திய அரசின் இந்த முடிவுக்கு சில எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும், மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியை ஒதுக்க வேண்டும் எனவும் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துவந்தன. இந்தநிலையில், இந்த ஆண்டிலிருந்தே நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியை மீண்டும் வழங்குவதற்கு இன்று (10.11.2021) நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, இந்த நிதியாண்டில் மீதமுள்ள காலகட்டத்திற்கு, தொகுதி மேம்பாட்டு நிதியாக ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் தலா 2 கோடி ரூபாய் ஒரே தவணையாக விடுவிக்கப்படும் என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் அறிவித்துள்ளார். மேலும், 2022 - 23 நிதியாண்டிலிருந்து 2025 - 26 நிதியாண்டு வரை, ஆண்டுக்கு ஐந்து கோடி தொகுதி மேம்பாட்டு நிதியாக அளிக்கப்படும் என அறிவித்துள்ள அனுராக் தாக்கூர், இந்த ஐந்து கோடி ரூபாய் இரண்டு தவணைகளில் அளிக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.