மக்களவைத் தேர்தல் ஒவ்வொரு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அதன்படி, பல்வேறு தொகுதிகளில் முதல் ஆறு கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, இறுதி கட்டத் தேர்தலானது வரும் ஜூன் 1ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏழு கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஜூன் 1ஆம் தேதி நடைபெறும் கடைசி தேர்தலை எதிர்கொண்டு அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே, இந்தியாவில் வர்த்தக பற்றாக்குறை அதிகரித்து வருவதாக பொருளாதார வல்லுநர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். குறிப்பாக, 2023-2024ஆம் ஆண்டில் சீனா, ரஷ்யா, சிங்கப்பூர் உள்ளிட்ட 10 நாடுகளுக்கு, இந்தியாவில் இருந்து பொருட்களை ஏற்றுமதி செய்வதை காட்டிலும், அங்கிருந்து அதிக அளவில் இறக்குமதிகள் செய்யப்படுவதாக பொருளாதார வல்லுநர்கள் தரவுகள் வெளியிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், வர்த்தக வளர்ச்சி தொடர்பான தரவுகளை குறிப்பிட்டு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பிரதமர் மோடிக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். இது தொடர்பாக மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘பிரதமர் மோடி தாலி, மட்டன், முகலாயர் மற்றும் முஜ்ரா பற்றி பேசுகிறார். ஆனால், அவர் ‘மேக் இன் இந்தியா; பற்றி பேசவில்லை. மோடி தனது பல தேர்தல் பிரச்சாரத்தில், பொருளாதாரம் பற்றி ஒரு வார்த்தை கூட பேசாதது ஏன்? ஏனென்றால், அவரது அரசாங்கத்தின் மோசமான தோல்வியில் உள்ளது.
மேக் இன் இந்தியா மற்றும் பிஎல்ஐ திட்டம் தோல்வியடைந்தது. ஏற்றுமதிகள் வீழ்ச்சியில் உள்ளன. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் 2004-2014 ஆண்டுகளில் 7.85 சதவீதமான உற்பத்தி வளர்ச்சி இருந்துள்ளது. ஆனால், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் 2014-2022ஆம் ஆண்டுகளில் 6.0 சதவீதம் தான் வளர்ச்சி இருந்திருக்கிறது. அதே போல், இந்தியாவின் ஏற்றுமதி வளர்ச்சியைப் பொறுத்த அளவில், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் 2004-2010ஆம் ஆண்டுகளில் 186.59 சதவீதமாகவும், 2009-2010 ஆண்டு வரையிலான ஆட்சியில் 94.39 சதவீதமாகவும் இருந்தது. ஆனால், 2014-2020 மற்றும் 2019-2024 எனத் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் 21.14 சதவீதமாகவும், 56.86 சதவீதமாகவும் தான் ஏற்றுமதி வளர்ச்சி இருந்திருக்கிறது.
செயலிகள் தடை மற்றும் போலி தேசியவாதம் இருந்தபோதிலும், சீனா இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியாக இருப்பதை மோடி உறுதி செய்தார். கடந்த ஆண்டு மட்டும், சீனப் பொருட்களின் இறக்குமதிக்கும், இந்தியாவின் ஏற்றுமதிக்கும் இடையே ரூ.7 லட்சம் கோடிக்கும் அதிகமாக வித்தியாசப்பட்டுள்ளது. மோடியின் ஆட்சியில் இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறை 194.19% அதிகரித்துள்ளது. பயாலஜிகலாக அவர் பிறந்திருக்க வாய்ப்பில்லை என்று மோடி கூறுகிறார். நாம் செய்ய வேண்டிய வேலை என்னவென்றால், பாஜகவை வெளியேற்றிவிட்டு இந்தியா கூட்டணிக்கு வாக்களிப்பதுதான்’ என்று குறிப்பிட்டுள்ளார்.