
சென்னை தரமணி பகுதியில், தனியார் பாலிடெக்னிக் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் படித்து வந்த 16 வயது மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக போலீஸுக்கு புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில், போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இதற்கிடையில், பாதிக்கப்பட்ட மாணவியையும், அவருடைய தோழியையும் கல்லூரியில் இருந்து கல்லூரி நிர்வாகம் நீக்கியதாக தகவல் வெளியானது. இந்த தகவலை அடுத்து, எஸ்.எஃப்.ஐ (SFI) என்ற மாணவர்கள் அமைப்பினர், கல்லூரி முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஒரு கட்டத்தில் அவர்கள் கல்லூரிக்குள் நுழைந்து போராட்டம் நடத்தினர். இதனால், அங்கு போலீஸ் வரவழைக்கப்பட்டது. அப்போது, போலீஸுக்கும், எஸ்எஃப்ஐ என்ற மாணவ அமைப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதத்தால், இரு பிரிவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக குழந்தை நலப் பிரிவு விசாரணை நடத்தியது. அந்த விசாரணையில், பாதிக்கப்பட்ட மாணவி, இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய ஆண் நண்பர் ஒருவரை நம்பி அவருடன் வெளியே சென்றுள்ளார். அப்போது அந்த நபர், மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் என்பது தெரியவந்தது. இதனையடுத்து, தரமணி அனைத்து மகளிர் காவல்துறையினர் அந்த நபர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.