
கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை அடுத்த எலத்தூர் என்ற இடத்தில் ஆலப்புழா கண்ணூர் விரைவு ரயிலில் தீ வைக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவத்தின் போது ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதை அறிந்த பயணிகள் சிலர் ரயில் பெட்டியிலிருந்து குதிக்க முயன்றதில் ஒரு குழந்தை உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர். ஒன்பது பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்சாகர் மாவட்டத்தில் சைருக் சபி என்ற இளைஞரை கைது செய்த போலீசார், அவரிடம் நடத்திய விசாரணையில் இவர் மகாராஷ்டிரா மாநிலம் ரத்னகிரியைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. இந்நிலையில் சைருக் சபியுடன் தொடர்பில் இருந்த டெல்லியைச் சேர்ந்த முகம்மது ஷாபி (வயது 46) என்பவரின் மகன் முகமது மோனிசை விசாரணைக்காக என்ஐஏ அமைப்பு கேரள மாநிலம் கொச்சிக்கு வரவழைத்தது.
இதைத் தொடர்ந்து முகம்மது ஷாபியும், அவரது மகன் முகம்மது மோனிசும் நேற்று முன்தினம் விசாரணைக்கு ஆஜராக கொச்சிக்கு வந்தனர். இவர்கள் இருவரும் கொச்சியில் உள்ள ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கியிருந்தனர். அன்று இருவரும் விசாரணைக்கு ஆஜரானார்கள். நேற்று மீண்டும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று என்ஐஏ அதிகாரிகள் தரப்பில் தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் நேற்று காலை முகம்மது ஷாபி ஓட்டல் கழிப்பறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கு தொடர்பான புகைப்படங்களும், வழக்கு தொடர்பான விவரங்களும் பத்திரிகைகளில் வெளியான நிலையில் கேரள மாநில தீவிரவாத தடுப்புப் படை ஐஜி விஜயன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.