
கேரளா மாநிலம், திருவனந்தபுரம் ஸ்ரீகார்யத்தில் உள்ளது சி.இ.டி என்ஜினியரிங் கல்லூரி. மிகவும் பிரபலமான இந்தக் கல்லூரியில் சுமார் 2500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தக் கல்லூரியையொட்டி பேருந்து நிறுத்தம் ஒன்று உள்ளது. அந்தப் பேருந்து நிறுத்தத்தில் இடப்பட்டிருக்கும் பயணிகள் உட்காரும் இருக்கைகளின் பற்றக்குறையால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். கல்லூரி முடிந்து மாலை நேரங்களில் மாணவர்களும் பேருந்துக்காக காத்திருக்கும் நேரங்களில் போதுமான இருக்கைகள் இல்லாமலும், இருக்கைகள் நல்லமுறையில் இல்லாமலும் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், இருக்கும் இருக்கைகளில் மாணவ, மாணவிகள் ஒன்றாக அமர்ந்து வந்தனர்.
இந்த நிலையில், மாணவ மாணவிகள் சேர்ந்து உட்கார்ந்து இருப்பதை பார்க்க பிடிக்காத அந்தப் பகுதி குடியிருப்போர் நலச்சங்கத்தைச் சேர்ந்தவர்கள் இரவோடு இரவாக அந்த இருக்கைகளை தனித்தனி இருக்கைளாக அறுத்து மாற்றினார்கள். வழக்கம் போல் 22-ம் தேதி காலையில் கல்லூரிக்கு வந்த மாணவ மாணவிகளுக்கு இது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து கல்லூரி முடிந்ததும் மாலையில் வழக்கம் போல் பேருந்து நிறுத்தத்தில் குவிந்த மாணவ மாணவிகள், ‘லேப் டாப் எதிர்ப்பு’ என்ற பெயரில் நூதன போராட்டமாக அந்த தனித்தனி இருக்கையில் மாணவர்கள் மடியில் மாணவிகளும் மாணவிகள் மடியில் மாணவர்களும் தோள் மீது கை போட்டு உட்கார்ந்து எதிர்ப்பை காட்டினார்கள்.
இதை அந்த பகுதியில் செல்லும் மக்கள் ஆச்சரியமாக பார்த்ததோடு மாணவ மாணவிகளுக்கு ஆதரவையும் தெரிவித்தனர். நாங்கள் சேர்ந்து இருக்கையில் இருப்பதால் என்ன தவறு நடந்து விடப் போகிறது எங்களைப் புண்படுத்தும் விதமாக குடியிருப்போர் நலச்சங்கத்தினர் செயல்பட்டு விட்டனர் என கூறி அவர்களின் போராட்டத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இது கேரளா முமுவதும் வைரலாக பரவியது.

இந்த நிலையில், 23-ம் தேதி அன்று அந்த பேருந்து நிறுத்தத்தின் இருக்கைகளைப் பார்வையிட வந்த திருவனந்தபுரம் இளம் பெண் மேயர் ஆர்யா ராஜேந்திரன், “கல்லூரிகளிலும் வெளியிடங்களிலும் மாணவ மாணவிகள் நண்பர்களாக மட்டும் பழகுவதில் எந்த தவறும் இல்லை” எனக் கூறினார். அவரிடம் மாணவ மாணவிகள் மீண்டும் இருக்கைகளை அமைக்க கோரிக்கை வைத்தனர். அதை உடனே அவர் நிறைவேற்றி தருவதாக உறுதி அளித்தார். இதற்கிடையில் மீண்டும் பழைய மாதிரியே இருக்கைகள் அமைக்க மேயர் உறுதி கொடுத்ததற்கு குடியிருப்போர் நலச்சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.