
திருவனந்தபுரம் விமானநிலையத்தை 50 ஆண்டுகளுக்கு அதானி குழுமத்தின் பராமரிப்பில் விடும் மத்திய அரசின் முடிவுக்கு எதிராகக் கேரள உயர் நீதிமன்றத்தில் கேரள அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.
லக்னோ, அகமதாபாத், மங்களூரு ஆகிய விமானநிலையங்களின் பராமரிப்பு பணிகளை அதானி குழுமம் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், ஜெய்ப்பூர், கவுகாத்தி, திருவனந்தபுரம் ஆகிய நகரங்களில் அமைந்துள்ள மூன்று விமான நிலையங்களை அடுத்த 50 ஆண்டுகளுக்கு பொதுத்துறை, தனியார் கூட்டு முயற்சியில் பராமரிக்க அதானி குழுமத்திடம் குத்தகைக்குவிட கடந்த வாரம் பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.
மத்திய அரசின் இந்த முடிவைக் கடுமையாக விமர்சித்த கேரள முதல்வர் பினராயி விஜயன், இந்த முடிவுக்கு ஒத்துழைப்பது கடினம் எனக் கூறினார். இந்த சூழலில், திருவனந்தபுரம் விமானநிலையத்தை தனியார்மயாக்கும் முடிவுக்கும், அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்கவும் தடைவிதிக்கக்கோரி கேரள உயர் நீதிமன்றத்தில், கேரள அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது.