18வது மக்களவைத் தேர்தல் இந்தியா முழுவதும் ஏப்ரல் 19ஆம் தேதி, முதல் கட்டமாகத் தொடங்கி, ஏப்ரல் 26, மே 7, மே 13, மே 20, மே 25 மற்றும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை (04.06.2024) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. நாளை வெளிவர இருக்கும் தேர்வு முடிவுக்காகப் பொதுமக்கள் ஆர்வமுடன் நாளைய விடியலுக்காக எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கின்றனர். இத்தகைய சூழலில் தான் சத்தீஸ்கர் மாநிலம் ராஜ்நந்த்கான் தொகுதியில் வாக்குப்பதிவு எந்திரங்களின் எண்கள் மாறியுள்ளதாக அம்மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் வேட்பாளருமான பூபேஷ் பாகேல் புகார் தெரிவித்திருந்தார். மேலும் வாக்கு எந்திரங்கள் மாற்றப்பட்டுள்ளது குறித்துத் தேர்தல் ஆணையம் விளக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருந்தார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பல்வேறு பட்டியல்களைக் குறிப்பிட்டு வெளியிட்டிருந்த பதிவில், “நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களின் எண்களைத் தேர்தல் ஆணையம் வழங்கியிருந்தது. இதில் வாக்குப்பதிவு இயந்திரம், கட்டுப்பாட்டு இயந்திரம் மற்றும் வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதைக் காட்டும் இயந்திரம் (VVPAT - Voter-verified paper audit trail) ஆகியவை அடங்கும்.
அதன்படி எனது தொகுதியான ராஜ்நாந்த்கானில் வாக்களித்த பிறகு படிவம் 17சியில் கொடுக்கப்பட்ட தகவலின்படி, பல இயந்திரங்களின் எண்கள் மாறியுள்ளன. எண்கள் மாற்றப்பட்ட வாக்குச் சாவடிகளால் ஆயிரக்கணக்கான வாக்குகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதேபோன்ற புகார்கள் பல மக்களவைத் தொகுதிகளிலும் வந்துள்ளன. இதுகுறித்து மாநிலத் தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்துள்ளோம். எந்த சூழ்நிலையில் இயந்திரங்கள் மாற்றப்பட்டன, தேர்தல் முடிவுகளில் ஏற்படும் பாதிப்புக்கு யார் பொறுப்பு?. மாற்றப்பட்ட எண்களின் பட்டியல் மிக நீளமானது. ஆனால் உங்கள் பார்வைக்காக ஒரு சிறிய பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இந்த புகார் குறித்து சத்தீஸ்கர் மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், “ராஜ்நாந்த்கான் மக்களவைத் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் எண்கள் பொருந்தவில்லை எனக் கூறப்படுவதில் உண்மை இல்லை. வாக்குப்பதிவின் போது பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், போட்டியிடும் வேட்பாளர்களுடன் சரிபார்த்த பிறகு தேர்தல் அதிகாரி பகிர்ந்துள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களின் பட்டியலின்படி சரியாக இருக்கும்.
வாக்கெடுப்பின் போது சில இயந்திரங்கள் தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக இயந்திரங்களின் பட்டியல் மாற்றப்பட்டது. மேலும், வாக்குப்பதிவு தொடங்கும் முன் வாக்குச்சாவடி முகவர்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைச் சீல் வைக்கப் பயன்படுத்தப்படும் பேப்பர் சீல்களில் கையெழுத்திட்டுள்ளனர். பார்வையாளர்கள் முன்னிலையில் வாக்கெடுப்பின் அடுத்த நாளே நடத்தப்பட்ட ஆய்வின் போது, போட்டியிடும் வேட்பாளர்கள் எவராலும் இதுபோன்ற பிரச்சினை எதுவும் எழவில்லை.
அனைத்து காகித முத்திரைகளும் வாக்கு எண்ணும் நேரத்தில் படிவம் 17சியில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணைக் கொண்டு சரிபார்க்கலாம். வாக்குப்பதிவு இயந்திரம், கட்டுப்பாட்டு இயந்திரங்கள் மற்றும் விவிபேட்கள் ஆகியவை வேட்பாளர்களுடன் வாக்குப்பதிவுக்கு முன்னும் பின்னும் பகிரப்பட்ட பட்டியல்களுடன் சரிபார்க்கப்படலாம். எனவே வாக்குப்பதிவுக்குப் பிறகு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் மாற்றம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு ஆதாரமற்றது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.