கேரளாவின் பாலக்காட்டில் சிறைக்கைதி ஒருவர் மதுபானம் என நினைத்து சானிடைசரைக் குடித்ததால் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,8 லட்சத்தைக் கடந்துள்ளது. இந்த வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 22,000 ஐ கடந்துள்ளது. மேலும், இந்த வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,17446 என்ற அளவில் உள்ளது. இந்தியாவில் கரோனா வைரசினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 694 என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் கரோனா பாதிப்பால் 16 பேர் உயிரிழந்த நிலையில், 45 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 121 பேரும், கேரளாவில் 110 பேரும் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கேரளாவில் சிறையிலிருந்த கைதி ஒருவர் கைகளைச் சுத்தப்படுத்த வைக்கப்பட்டிருந்த சானிடைசரை குடித்து உயிரிழந்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளா பாலக்காட்டில் உள்ள சிறையில் திருட்டு வழக்கில் கைதாகி ராமன்குட்டி என்ற நபர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். புதன்கிழமை காலை ராமன்குட்டி வழக்கம்போல தனது பணிகளைப் பார்த்து வந்துள்ளார். அப்போது திடீரென அவர் மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து அவர் அருகிலிருக்கும் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
ஆனால் மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், "சிறையில் தயாரிக்கப்பட்ட ஐசோபுரொபில் ஆல்கஹால் உள்ள சானிடைசரை மது என நினைத்து அவர் குடித்ததாகச் சந்தேகிக்கிறோம்" என மூத்த சிறை அதிகாரி ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வரும் சூழலில், பிரேதப்பரிசோதனை முடிந்த பிறகே அவர் எப்படி உயிரிழந்தார் எனத் தீர்மானத்திற்கு வர முடியும் என்று போலீஸார் தரப்பில் கூறப்படுகிறது.