இந்தியாவில் சிறந்த குடிமக்களுக்கு நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டு வருகிறது. அதாவது அரசியல், கலை, இலக்கியம், அறிவியல், விஞ்ஞானம் உள்ளிட்ட துறைகளில் சாதனை படைப்பவர்களுக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்கி வருகிறது.
அந்த வகையில் மறைந்த சுதந்திரப் போராட்ட வீரரும், பீகார் முன்னாள் முதல்வருமான கர்பூரி தாக்கூருக்கு நாட்டின் மிக உயரிய விருதான ‘பாரத ரத்னா’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய அரசு நேற்று வெளியிட்டது. கர்பூரி தாக்கூர் ஆட்சிக் காலத்தில் பீகாரில் முழு மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டது. பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியல் சமூக மக்களுக்காகப் போராடியதால் இவர் ‘மக்கள் தலைவர்’ எனவும் அழைக்கப்பட்டார். இவர் அரசுப் பணி, கல்வியில் பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்திற்கு இட ஒதுக்கீடு கோரி செயல்பட்டவர் ஆவார். பீகார் முதல்வராக இவர் இருந்தபோது பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு கல்வியில் 12% இட ஒதுக்கீடு கொண்டு வந்தவர். கர்பூரி தாக்கூர் மறைந்து 35 ஆண்டுகளுக்குப் பிறகு அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பிரதமர் மோடி இது குறித்து எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சமூக நீதியின் தலைசிறந்த தலைவரான கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா விருது வழங்கி கௌரவிக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அவரது நூற்றாண்டு விழாவையொட்டி எடுக்கப்பட்ட இந்த முடிவு நாட்டு மக்களுக்கு பெருமை சேர்க்கும். பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோரின் மேம்பாட்டிற்கான கர்பூரியின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் தொலைநோக்கு பார்வை, இந்தியாவின் சமூக மற்றும் அரசியல் தளத்தில் அழியாத முத்திரையை பதித்துள்ளது. இந்த பாரத ரத்னா விருது அவரது ஒப்பற்ற பங்களிப்பிற்கான பணிவான அங்கீகாரம் மட்டுமல்லாது சமூகத்தில் நல்லிணக்கத்தை மேலும் மேம்படுத்தும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.