பசி கொடுமை தாங்க முடியாமல் களிமண்ணை சாப்பிட்ட 4 குழந்தைகளை அதிகாரிகள் மீட்ட சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது.

கேரளாவின் திருவனந்தபுரம் பகுதியில் குடிசை வீடு ஒன்றில் ஸ்ரீதேவி என்பவர் குடியிருந்து வருகிறார். இவருக்கு 6 குழந்தைகள் உள்ளனர். 7 வயதில் இரு குழந்தைகளும், 5 வயதில் இரு பெண் குழந்தைகளும், ஒன்றரை வயதில் ஒரு குழந்தையும், 3 மாதத்தில் ஒரு குழந்தையும் உள்ளது. கூலி தொழிலாளியான ஸ்ரீதேவியின் கணவர் தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து தனது மனைவியையும், குழந்தைகளையும் துன்புறுத்துவதை வாடிக்கையாக வைத்திருந்துள்ளார். இந்த நிலையில், போதிய வருமானம் இல்லாமல் குழந்தைகளுக்கு சரியான உணவு கொடுக்க முடியாமல் இருந்துள்ளார் ஸ்ரீதேவி.
சமீபத்தில் பசி தாங்கமுடியாத தனது குழந்தைகள் சாலையில் இருக்கும் களிமண்ணை உண்பதை ஸ்ரீதேவி கண்டுள்ளார். குழந்தைகளிடம் இதுகுறித்து விசாரித்த போது, பசி தாங்க முடியவில்லை, எனவே மண்ணை சாப்பிடுகிறோம் என தெரிவித்துள்ளனர். குழந்தைகளின் பசியை போக்கமுடியாத சூழலில், தங்களது குடும்பம் குறித்து அதிகாரிகளுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் ஸ்ரீதேவி. இந்தக் கடிதத்தைப் பார்த்த குழந்தைகள் நலப் பாதுகாப்புக் குழுவினர் நேற்று காலை ஸ்ரீதேவி வீடிற்கு வந்து குழந்தைகளுக்கு உணவளித்து, பின்னர் 4 குழந்தைகளை மட்டும் காப்பகத்துக்கு அழைத்துச் சென்றார்கள். மற்ற இரு குழந்தைகளும் பச்சிளம் குழந்தைகளாக இருப்பதால், ஸ்ரீதேவியிடம் இருப்பது அவசியம் என்பதால் அவரிடம் விட்டு சென்றுள்ளனர்.
மேலும் ஸ்ரீதேவியின் குடும்ப வருமானத்துக்காக மாநகராட்சியில் தற்காலிகமாக ஒரு பணி வழங்கப்படும் எனவும், அரசு சார்பில் வீடு இல்லாதவர்களுக்காகக் கட்டப்பட்டு வரும் வீடுகளில் ஒரு வீடு ஸ்ரீதேவிக்கு ஒதுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குழந்தைகளின் நிலை குறித்த பதிவு இணையத்தில் வைரலான நிலையில், அக்குடும்பத்திற்கு உதவ பல தொண்டு நிறுவனங்களும், தனி நபர்களும் முன்வந்துள்ளனர்.