கேரளா, இமாச்சலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஹரியானா, குஜராத் ஆகிய மாநிலங்களில் உள்ள பறவைகளுக்கு, பறவைக் காய்ச்சல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 'எச்5 என்1' எனப்படும் இந்த வைரஸ், கோழி மற்றும் வாத்துகளில் அதிகளவில் காணப்படுகின்றன. பொதுவாக பறவைகளின் இடப்பெயர்வு காலத்தில் இந்நோய், பறவைகளை அதிகம் தாக்கும். அந்தவகையில் இமாச்சலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் இந்த பறவைக் காய்ச்சல் பரவத்தொடங்கியது.
நாடு முழுவதும் இந்தப் பறவைக் காய்ச்சலால் மக்கள் பீதிக்குள்ளாகியுள்ள நிலையில், தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில், அம்மாநில கால்நடைத் துறையினரின் துரித நடவடிக்கையால் குட்டநாடு, ஆலப்புழா, கோட்டயம், கைப்புழம் உட்படப் பல பகுதிகளில் 40,000க்கும் அதிகமான வாத்துகள் மற்றும் கோழிகள் அழிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், டெல்லியில் பறவைக் காய்ச்சல் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகக் கருதப்பட்டதால், உயிருள்ள கோழிகளை டெல்லிக்கு எடுத்து வர அம்மாநில முதல்வர் தடை விதித்துள்ளார்.