'' Your price is just 2,500 ... '' - Letter due to kerala woman's issue

கடந்த 2 ஆண்டுகளாக வரதட்சணை கொடுமை காரணமாக கேரளாவில் தொடர்ந்து இளம்பெண்கள் பலர் தற்கொலை செய்துகொள்ளும் நிகழ்வுகள் அதிர்ச்சியை ஏற்படுத்திவருகிறது. அதிலும் தற்கொலை செய்துகொள்பவர்கள் எல்லாருமே படித்த பட்டதாரிகள் என்பதுதான் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

எர்ணாகுளம் மாவட்டம், ஆலுவா கிழமாட்டு எடயப்பூரம் பகுதியைச் சேர்ந்த தில்ஷத் சலீம் - பர்ஹானா தம்பதியினரின் மகள் மோபியா பர்வீன் (21). தொடுபுழையில் உள்ள சட்டக்கல்லூரியில் படித்துவந்தார். இவருக்கும் இருமல்லூரைச் சேர்ந்த யூசுப் - ருஹியா தம்பதியினரின் மகன் முகம்மது சுகைகல் என்பவருக்கும் இடையே ஃபேஸ்புக் மூலம் தொடர்பு ஏற்பட்டு, அது நட்பாக மாறி, கடைசியில் காதல் ஏற்பட்டது. அதன்பிறகு இருவீட்டார் சம்மதத்துடன் ஃபேஸ்புக் நட்பு கடைசியில் கடந்த ஏப்ரல் மாதம் திருமணத்தில் முடிந்தது.

திருமணத்திற்கு முன்பு, முகம்மது சுகைல், தான் திருமணம் முடிந்ததும் அமெரிக்கா செல்ல இருக்கிறேன் என்று பெண் வீட்டாரிடம் தெரிவித்துள்ளார். அதனால், மோபியா பர்வீனி பெற்றோர் வரதட்சணையாக 50 பவுன் நகை மற்றும் 3 லட்சம் பணம் கொடுத்துள்ளனர். ஆனால், திருமணம் முடிந்த பிறகுதான் முகம்மது சுகைல் அமெரிக்கா செல்லப் போவதாக கூறியது பொய் என்றும், எந்த ஒரு வேலையும் இல்லாமல் ஊர் சுற்றித் திரிவதும் தெரியவந்தது. இது மோபியா பர்வீனுக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Advertisment

kerala

மேலும் முகம்மது சுகைல், “நான் சினிமா படம் எடுக்கப் போகிறேன். அதற்கு 40 லட்சம் தேவைப்படுவதால் கூடுதல் வரதட்சணையாக உனது வீட்டில் இருந்து அந்தப் பணத்தை வாங்கி வா” என கேட்டு அடிக்கடி மோபியா பர்வீனை கொடுமைப்படுத்தி வந்துள்ளார். அந்தக் கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்ததால் மோபியா பர்வீன் ஆலுவா காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். ஆனால், இன்ஸ்பெக்டர் சுதீர், எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மோபியா பர்வீனை தரக்குறைவாகப் பேசியுள்ளார்.

இதனால் மன வேதனையடைந்த மோபியா பர்வீன் பெற்றோர் வீட்டுக்கு வந்தார். அங்கு பெற்றோரிடம் தனக்கு நடந்த வரதட்சணை கொடுமை பற்றி எதுவும் கூறாமல் சோகத்திலேயேஇருந்துள்ளார். இந்தநிலையில்தான், வீட்டில் மின் விசிறியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். தன்னுடைய தற்கொலைக்கு கணவர், மாமனார் மற்றும் மாமியார் ஆகியோர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதே காரணம் என கடிதம் எழுதி வைத்திருந்ததோடு, போலீஸ் இன்ஸ்பெக்டரும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதுகுறித்து உயிரிழந்த பெண்ணின் பெற்றோர்கள் கூறுகையில், ''இதற்கு முன் சுகைல் எங்கள் மகளிடம் 'முத்தலாக்' சொல்லியிருந்தான் அதனால் எங்களது மகள் மனமுடைந்து காணப்பட்டார். முத்தலாக் எல்லாம் தடை செய்து விட்டார்கள் என கூறி எனது மகளுக்கு தொடர்ந்து ஆறுதல் சொல்லிவந்தோம். மகளின் உடலில் டாட்டூ குத்தி கொடுமைப்படுத்தியுள்ளான். இறுதியாக சுகைல் என் மகளுக்கு எழுதிய கடிதத்தில் உன்னுடைய விலை வெறும் 2,500 ரூபாய்தான் என கேலி செய்து எழுதியிருந்ததைத்தான் அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அந்த கடிதமும் வார்த்தையும்தான் அவளை தற்கொலை முடிவுக்குத் தள்ளியுள்ளது'' என்றனர்.

இச்சம்பவம் ஆலுவாவை தாண்டி எர்ணாகுளம் மாவட்டம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, க்ரைம் பிரிவு போலீசார் விசாரணை நடத்தி முகம்மது சுகைல் மற்றும் அவருடைய பெற்றோர் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.நடவடிக்கை எடுக்காத ஆலுவா காவல் நிலைய ஆய்வாளர் சுதீர் மீது ஏராளமான புகார் உள்ளதாகவும், ஆய்வாளர் நடவடிக்கை எடுக்காதது குறித்து கேரள காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும் கேரள பெண்கள் ஆணையத்தின் தலைவர் சதிதேவி கூறியுள்ளார்.