“ஹே நில்லு... நில்லு... நீயெல்லாம் உள்ள வரக்கூடாது. மரியாதையா இங்கிருந்து வெளிய போ" என நரசிம்மர் கோயிலுக்குள் நுழைந்த பட்டியலின பெண்ணை அறங்காவலர் அடித்து விரட்டும் சிசிடிவி காட்சி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூர் சிட்டிக்கு அருகே உள்ளது அமிர்தஹல்லி கிராமம். இந்தப் பகுதியில் பிரசித்தி பெற்ற லக்ஷ்மி நரசிம்ம சுவாமி கோயில் உள்ளது. இந்தக் கோயிலின் விசேஷ நாட்களில் ஏராளமான பக்தர்கள் உள்ளே சென்று சாமி தரிசனம் செய்வது வழக்கமான ஒன்றாகும். இந்நிலையில், கடந்த டிசம்பர் 21ஆம் தேதியன்று பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் இந்த நரசிம்ம சுவாமி கோயிலுக்கு வழிபாட்டுக்காகச் சென்றுள்ளார்.
அந்த சமயம், கோயிலுக்குள் இருந்த அறங்காவலர் முனி கிருஷ்ணா என்பவர், "ஹே நில்லு...நில்லு... நீயெல்லாம் உள்ள வரக்கூடாது. மரியாதையா கோயில விட்டு வெளிய போ" என அந்தப் பெண்ணிடம் வாக்குவாதம் செய்துள்ளார். இதையெல்லாம் சிறிதளவும் கண்டுகொள்ளாத அந்தப் பெண், தொடர்ந்து சாமி கும்பிட முயன்றுள்ளார். இதனால் கடுப்பான கோயில் அறங்காவலர், ஒரு பெண் என்றும் பாராமல் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்தால் அந்தப் பெண்ணை அடித்து கோயிலை விட்டு விரட்ட முயன்றார்.
அப்போது, அந்தப் பெண்ணை அடித்து கீழே தள்ளிய அறங்காவலர், அவரின் தலைமுடியைப் பிடித்து தரதரவென வெளியே இழுத்துச் சென்றார். அதுமட்டுமல்லாமல், அந்தப் பெண்ணை, கோயிலில் இருந்து விரட்டிய பிறகும் கோபம் குறையாத அறங்காவலர், அவரை உருட்டுக்கட்டையைக் கொண்டு தாக்க முயன்றார். அந்த சமயத்தில் அருகில் இருந்தவர்கள் அறங்காவலரைத் தடுத்து நிறுத்தினர்.
இத்தகைய சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பெண், அறங்காவலர் குறித்து அமிர்தஹல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, அந்தப் பெண் அளித்த புகாரின் அடிப்படையில் அறங்காவலர் முனி கிருஷ்ணாவை கைது செய்த பெங்களூரு போலீசார், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதன்பிறகு, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில், கோயிலுக்குள் நுழைந்த பெண்ணை, அறங்காவலர் அடித்து விரட்டும் சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- சிவாஜி