கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற எம்எல்ஏக்கள் 13 பேர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ததை அடுத்து குமாரசாமியின் ஆளும் அரசு கவிழும் நிலையில் உள்ளது.
எம்.எல்.ஏ க்களின் ராஜினாமா முறைப்படி வழங்கப்படாததால், அதனை ஏற்க முடியாது என சபாநாயகர் அறிவித்துள்ள நிலையில், ராஜினாமா செய்த எம்.எல்.ஏ க்கள் மும்பையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கியுள்ளனர்.
தற்போதைய அமைச்சரவையில் அனைவரும் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, அதிருப்தி எம்.எல்.ஏ க்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அப்படியிருந்தும் அவர்கள் ஒப்புக்கொள்ளாததால், கர்நாடகா காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரான சிவக்குமார் எம்.எல்.ஏ க்களை பார்க்க மும்பை சென்றார். ஆனால் அவர் எம்.எல்.ஏ க்கள் சந்திக்கவிடாமல் ஹோட்டல் வாசலிலேயே காவலர்களால் தடுத்து நிறுத்தப்பட்டார். இதனையடுத்து அங்கேயே அவர் காத்திருக்கிறார்.
இந்த நிலையில் பெரும்பான்மையை இழந்ததால் குமாரசாமி உடனே பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி இன்று சட்டமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு தர்ணா போராட்டம் நடைபெறும் என்று எடியூரப்பா அறிவித்துள்ளார். பாஜக, காங்கிரஸ் என அனைவரும் ஆட்சிக்காக போராடிவரும் நிலையில் ஆட்சியை காப்பாற்றிக்கொள்வது குறித்த குமாரசாமி ஆலோசனை நடத்திவருகிறார்.