கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு தென்மாவட்டத்தில் பங்குனி உத்திர திருவிழா கொடை வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. கிராமம் தொட்டு நகரவாசிகள் வரை அன்றைய தினம் தங்களின் சாஸ்தா கோவிலில் மேளதாளம் என கொடைத் திருவிழாவாகவே நடத்தி வழிபட்டனர். உத்திரத்தில் சிறப்பு அபிஷேக வழிபாடுகள் என சுவாமி அலங்காரங்களுடன் கூடிய தங்களின் சாஸ்தாவை வழிபட்டனர். இதற்கு வசதியாக தென்மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறைகளும் ஆட்சியர்களால் அறிவிக்கப்பட்டது.
பங்குனி உத்திரம் சாஸ்தா கோவில் வழிபாடு போன்று கேரளாவிலும் உத்திரத் திருவிழா வழிபாடுகள் நடந்தேறின. குறிப்பாக கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் பூப்பாரா கிராம மக்கள் அங்குள்ள தங்களின் சாஸ்தா கோவிலில் கொடைவிழா நடத்தினர். தங்கள் குல சாஸ்தாவை வழிபட வெளிப்பகுதிகளில் இருந்தெல்லாம் மக்கள் திரண்டிருந்தனர். மேளதாளங்கள், சிறப்பு உறுமி மேளங்கள் என சாஸ்தா கொடைவிழா களைகட்டியது.
திரளான பக்தர்களின் கூட்டம் என்பதால் பாதுகாப்பிற்காக அப்பகுதி காவல் நிலைய எஸ்.ஐ.யான ஷாஜி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டனர். மதியம் உச்சிக்கால பூஜையின் போது கரக உறுமி மேளங்கள் உச்சஸ்தாதியில் முழங்கின. அது சமயம் பக்திப் பாடல்கள் என கோயில் களைகட்ட பக்தர்கள் கூட்டம் திரண்டிருந்தது.
ஒலிப்பெருக்கிகளில் பக்திப்பாடல்களை ஒலிக்க விட பக்தர்கள் பக்திப் பரவசத்தில் ஆழ்ந்திருந்தனர். அந்நேரம் பாதுகாப்பிற்காக அங்கு நின்றிருந்த எஸ்.ஐ. ஷாஜியும் உணர்ச்சி பொங்க அந்தப் பாடலை பாடியபடி சுற்றிச் சுற்றி ஆடியது பார்ப்பவர்களைப் பரவசமாக்கியிருக்கிறது. எஸ்.ஐ.யின் அந்த நடனம் அதிகமானதைக் கண்ட அங்குள்ள பக்தர்கள் சிலர் அவரை ஆசுவாசப்படுத்தி அமைதிப்படுத்தினர்.
கோவில் கொடை விழாவில் நடனம் அடிய எஸ்.ஐ. ஷாஜியின் வீடியோ வைரலாக பரவியது. இதனை அடுத்து மாவட்ட எஸ்.பி. உடனடியாக அவரை சஸ்பெண்ட் செய்து அவரிடம் விசாரணை நடத்த உத்தரவிட்டிருக்கிறார்.