கர்நாடக மாநிலம் மைசூர் அருகே உள்ள டி. நரசிபுரா கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி ஆனந்த். இவருக்கு 10 வயதில் மகன் இருக்கிறான். அந்தச் சிறுவனுக்கு நரம்பு சம்பந்தமான பிரச்சினை இருப்பதால், பெங்களூருவில் உள்ள நிம்கான்ஸ் மருத்துவமனைக்கு மாதம் இருமுறை மகனை அழைத்துச் சென்று சிகிச்சை எடுத்துள்ளார் ஆனந்த். முழு முடக்கத்தால் 300 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பெங்களூரு சென்று தன் மகனை மருத்துவமனையில் காட்ட முடியாததால், ஆனந்த் மனம் வருந்தியுள்ளார். இருந்தும் மகனின் உடல்நிலையைக் கவனத்தில்கொண்டு சைக்கிள் மூலமாகவே பெங்களூரு செல்ல முடிவெடுத்த அவர், காவல்துறையினருக்குப் பயந்து யாரும் பயன்படுத்தாத குறுக்கு வழிப் பாதை மூலம் பெங்களூரு சென்றுள்ளார்.
மருத்துவமனையில் இருந்த மருத்துவர்களிடம் தன் மகனுக்கு மாத்திரை வாங்க வந்தேன் என்று கூறியுள்ளார். இந்தச் செய்தியைக் கேட்டு அதிர்ச்சியான மருத்துவர்கள், சிறுவனுக்குத் தேவையான மாத்திரைகளைக் கொடுத்துள்ளனர். மேலும், வழிச்செலவுக்காக 1000 ரூபாய் பணத்தையும் ஆனந்திடம் கொடுத்துள்ளார்கள். இதுதொடர்பாக ஆனந்த் கூறுகையில், "என் மகன் மாத்திரை இல்லாமல் இருக்க முடியாது. அதனால்தான் எப்படியாவது மாத்திரை வாங்கிவிட வேண்டும் என்று கஷ்டத்தைப் பார்க்காமல் மருத்துவமனை சென்றேன்" என்று தெரிவித்தார்.