EIA 2020 வரைவை இறுதி செய்து அரசிதழில் வெளியிட கர்நாடக உயர்நீதிமன்றம் மத்திய அரசுக்கு இடைக்காலத்தடை விதித்துள்ளது.
மத்திய அரசு உருவாக்கியுள்ள புதிய சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவுக்கு நாடு முழுவதும் பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு எழுந்து வருகிறது. இந்தச் சூழலில் EIA 2020 வரைவை இறுதி செய்து அரசிதழில் வெளியிட கர்நாடக உயர்நீதிமன்றம் மத்திய அரசுக்கு இடைக்காலத்தடை விதித்துள்ளது. மத்திய அரசின் இந்த வரைவுக்குத் தடைகோரி டெல்லி மற்றும் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டது. கடந்த ஜூன் 30ஆம் தேதி டெல்லி உயர்நீதிமன்றம் இந்த வழக்கில் அளித்த தீர்ப்பில், வரைவு மீது பொதுமக்கள் கருத்துகளைத் தெரிவிப்பதற்கான கால அவகாசத்தை ஆகஸ்ட் 11-ஆம் தேதி வரை நீட்டித்தும், 22 இந்திய மொழிகளில் இந்த அறிவிக்கையை மொழிபெயர்க்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இன்று இதுதொடர்பான மனுவை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம், ஏன் இன்னும் பிற ஆங்கிலம், இந்தி அல்லாத பிற மொழிகளில் அறிவிக்கையை மொழிபெயர்க்கவில்லை எனக் கேள்வியெழுப்பியதோடு, அடுத்த விசாரணை தேதி வரை இந்த வரைவு அறிவிக்கையை மத்திய அரசு இறுதி செய்து வெளியிடக்கூடாது எனக்கூறி, விசாரணையை செப்டம்பர் 7ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது.