மத்திய பிரதேச மாநிலத்தில், முதல்வர் மோகன் யாதவ் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில், தகுதியுள்ள பெண்களுக்கு நிதி உதவி வழங்குவதையும், அவர்களின் பொருளாதார சுதந்திரத்தையும் ஒட்டுமொத்த நல்வாழ்வையும் வளர்ப்பதையும் நோக்கமாக கொண்டு கடந்த 2023ஆம் ஆண்டு ‘லாட்லி பெஹ்னா யோஜனா’ என்ற திட்டத்தை அம்மாநில அரசு கொண்டு வந்தது. இந்த திட்டத்தை மகாராஷ்டிராவிலும் அம்மாநில பா.ஜ.க கூட்டணி அரசு தொடங்கப்பட்டது.
இந்த திட்டத்திற்கு, உத்தவ் தாக்கரேயின் சிவசேனா அணியைச் சேர்ந்த சஞ்சய் ராவத் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்த திட்டம் குறித்து அவர் பேசுகையில், “இந்த திட்டத்தால் மாநிலத்தின் பொருளாதாரம் சரிந்துள்ளது. மகாராஷ்டிராவில் விரைவில் இந்த திட்டம் மூடப்படும்” என்று கூறியிருந்தார். இவரது கருத்துக்கு மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா பதிலளித்துள்ளார்.
இது குறித்து மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா பேசியதாவது, “மத்திய பிரதேசத்தில் உள்ள பெண்கள் அனைவரும், சஞ்சய் ராவத்துக்கு தகுந்த பதிலை கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். மாநிலத்தில் ஒவ்வொரு பெண்ணுக்கும் அதிகாரம் அளிக்கும் வகையில் மத்திய பிரதேசத்தில் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது. வாழ்க்கையில் எதையும் செய்யாதவர்கள், எதையும் செய்ய விரும்பாதவர்கள் மக்கள் நலத்திட்டங்களை களங்கப்படுத்துகின்றனர். இந்த நாட்டில் உள்ள பெண்கள் அவருக்கு பதிலளிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.
இந்த திட்டம் மகாராஷ்டிராவில் தொடங்கப்பட்டு நான்கு தவணையாக பணம் செலுத்தப்படுகிறது. மகாராஷ்டிராவிலும் ஒவ்வொரு பெண்ணும் அதிகாரம் பெறுகிறார்கள். சஞ்சய் ராவத் ஏன் இப்படி பொறாமைப்படுகிறார்?. ஒருவேளை இந்த திட்டத்தால் அவருடைய குடும்பமும் பயன்பெறலாம்” என்று கூறினார்.