ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் நிலையில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் துணை தலைமை நிர்வாக அதிகாரியும், தலைமை நிதி அதிகாரியுமான அமித் அகர்வால் திடீர் ராஜினாமா செய்தார். இவர் 2015- ஆம் ஆண்டு ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் ராஜினாமா அந்நிறுவனத்தில் மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தனது சொந்த காரணங்களுக்காகவே அமித் அகர்வால் பதவியை ராஜினாமா செய்துள்ளார் என்று தெரிவித்துள்ளது. இதற்கிடையே ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் பங்குகளை எஸ்பிஐ வங்கி ஏலம் விடுவதற்கான நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் ஏற்கெனவே ஜெட் ஏர்வேஸில் பணியாற்றிய ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய சம்பள பாக்கி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி, மும்பையில் விமான ஊழியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது வரை ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் சிஇஒ ராஜினாமா என்பது நிறுவனத்தின் நிதி நெருக்கடியில் இருந்து மீட்கவே என பரவலாக பேசப்பட்டு வருகிறது. ஆனால் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொண்டாலும் ஜெட் ஏர்வேஸ் ஊழியர்களின் எதிர்காலம் கேள்வி குறியாக தான் இருக்கிறது. இந்த நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்களுக்கு ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ உள்ளிட்ட நிறுவனங்கள் ஊழியர்களுக்கு பணி வாய்ப்பை வழங்கினாலும் மாத ஊதியம் குறைவு என ஜெட் ஏர்வேஸ் நிறுவன ஊழியர்கள் கூறுகின்றனர். அதே போல் தற்போது மக்களவை தேர்தல் நடைப்பெற்று வருவதால் வாக்கு எண்ணிக்கை முடிவுகளுக்கு பிறகே ஜெட் ஏர்வேஸ் ஊழியர்களுக்கு மத்தியில் அமையும் அரசு நிரந்தர தீர்வு காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.