மகாராஷ்டிராவில், வரும் நவம்பர் 20ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள், நவம்பர் 23ஆம் தேதியன்று எண்ணப்பட்டு அன்றே தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து கூட்டணி கட்சிகளுக்குள் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்து வந்தன. அந்த வகையில், நேற்று (29-10-24) வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்றுள்ளது.
இந்த தேர்தலில், ஆளும் கூட்டணி அரசான பா.ஜ.க - சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே பிரிவு), அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி மீண்டும் கூட்டணியோடு இந்த தேர்தலை சந்திக்கிறது. அதே போல், இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி, உத்தவ் தாக்கரேவின் சிவசேனா ஆகிய கூட்டணி கட்சிகள் தேர்தலில் களமிறங்கியுள்ளது.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் கோட்டையான பாராமதி தொகுதியில், பா.ஜ.க கூட்டணி சார்பாக அஜித் பவார் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து, அஜித் பவாரின் சகோதரர் மகன் யுகேந்திர பவார், சரத்சந்திர பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிடுகிறார்.
சரத்சந்திர பவார் - தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிடும் யுகேந்திர பவாரை ஆதரித்து சரத் பவார் நேற்று பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசிய அவர், ‘அஜித் பவார் தனது அரசியல் லாபத்திற்காக நெருங்கிய பவார் குடும்பத்தை சிதைத்துள்ளார். எனது பெற்றோர்கள், எனது சகோதர சகோதரிகள் குடும்பங்களை உடைக்கும் பாவம் ஒருபோதும் எங்களிடம் இல்லை. மக்கள் நீண்ட காலத்திற்கு முன்பே மாநிலத்தை வழிநடத்தும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தனர். நான் இப்போது வழிகாட்டியாக இருக்கிறேன். கட்சி விவகாரங்களை நிர்வகிக்கும் பொறுப்பை புதிய தலைமுறையினரிடம் ஒப்படைத்துள்ளேன்’ என்று கூறி அஜித் பவார் பேசியது போல் மிமிக்ரி செய்தார். அது அங்குள்ளவர்களிடம் சிரிப்பலையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், தன்னை மிமிக்ரி செய்த சரத் பவார் மீது அஜித் பவார் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இது குறித்து அஜித் பவார் பேசியதாவது, “நான் எப்போதும் சரத் பவாரை கடவுளாகவே பார்க்கிறேன். ஆனால் அவர் என் பேச்சை, கைக்குட்டையால் துடைத்து மிமிக்ரி செய்கிறார். சரத் பவார் ஒரு அனுபவம் வாய்ந்த தலைவர். அவர் என்னை மிமிக்ரி செய்தது பலருக்கு பிடிக்கவில்லை. அதை யுகேந்திர பவார் அல்லது வேறு சிலர் செய்திருந்தால் பரவாயில்லை. அம்மாவின் பெயரைச் சொன்னதும் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டேன். நான் கண்ணீர் விட்டேன், அது இயற்கையானது. சில நேரங்களில் அது நடக்கும். நான் என் கைக்குட்டையை எடுக்கவில்லை, ஆனால் அவர் அதை செய்தார். இவ்வளவு நாள் நான் ராஜ் தாக்கரே மட்டுமே மிமிக்ரி செய்கிறார் என்று நினைத்தேன். ஆனால் நேற்று சரத் பவார் என்னை மிமிக்ரி செய்தார். நான் மிகவும் மோசமாக உணர்கிறேன். எனது மாமா அதைச் செய்திருக்கக்கூடாது” என்று கூறினார்.