Skip to main content

பட்டப்பகலில் அரங்கேறிய கொடூரம்; நடுரோட்டில் கதறி அழுத கேரளப் பெண்

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
Jain snatched from Kerala woman

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ளது நெய்யாற்றுக்கரை. இந்தப் பகுதியைச் சேந்தவர் லிஜி. 30 வயதுடைய இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பாக தனது வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். லிஜி தனக்கென்று இரு சக்கர வாகனம் ஒன்று வைத்திருப்பதால், அதில்தான் வெளியே செல்லும் போது சென்று வருவது வழக்கம்.

அதன்படி, வழக்கமாக தனது இரு சக்கர வாகனத்தில் லிஜி சென்றுள்ளார். அப்போது, வீட்டில் இருந்து புறப்பட்ட லிஜி நெய்யாற்றுக்கரையில் ஒரு சாலையில் சென்றிருக்கிறார். அந்த சாலையில் வலது புறமாக சென்றவர், ரோட்டை கிராஸ் செய்வதற்காக தனது இரு சக்கர வாகனத்தில் இண்டிகேட்டரை ஆன் செய்து மாறுவதற்கு தயாராகியுள்ளார். ஆனால், அப்போது அடுத்தடுத்து வாகனங்கள் வந்துள்ளது. ஆனாலும் அவசரப்படாத லிஜி, அந்த வாகனங்கள் சென்ற பிறகு மாறலாம் என அந்த இடத்திலேயே நின்றுள்ளார். அப்போது, அந்த வழியாக இரு சக்கர வாகனம் ஒன்றிலிருந்து இரண்டு நபர்கள் ஹெல்மெட் அணிந்துகொண்டு வந்துள்ளனர். அந்த டூவீலர் லிஜி நிற்கும் வாகனத்திற்கு அருகே வந்துள்ளது. அப்போது, அந்த இரு சக்கர வாகனத்தின் பின் புறத்தில் அமர்ந்திருந்த ஒருவன், தனது வாகனத்தை திருப்புவதற்கு தயாராக நின்ற லிஜியின் கழுத்தில் இருந்த 6 சவரன் தங்கச் சங்கிலியைப் சட்டென்று பிடித்து இழுத்துள்ளான்.

இதனை சட்றென்று சுதாரித்து கொண்ட லிஜி, உடனே அவனிடமிருந்து தங்க சங்கிலியைப் பாதுகாக்க முயன்றுள்ளார். அப்போது தனது வாகனத்தை அங்கேயே போட்டுவிட்டு சங்கிலியை இறுகப் பிடித்துக்கொண்டார் லிஜி. ஆனால், அந்தத் திருடனோ தான் வந்திருந்த பைக்கில் இருந்து இறங்கி அந்தப் பெண்ணுடன் மல்லுக்கட்டி அவரை கீழே தள்ளி, தங்கச் சங்கிலியை பறித்துள்ளார். இதனால் அதிர்ச்சியில் உறைந்த லிஜி, கீழே இருந்து எழுந்து, கத்தி கதறி கூச்சலிட்டுள்ளார். ஆனால், அதற்குள் அங்கு தயார் நிலையில் நின்ற பைக்கில் ஏறி மின்னல் வேகத்தில் தப்பித்து சென்றுள்ளான் அந்தத் திருடன். இதனைத் தாங்கிக்கொள்ள முடியாத அந்தப் பெண், செய்வதறியாமல் கதறி அழுதுள்ளார். பின்னர், அந்த வாகனம் சென்ற வழியிலேயே ஓடியுள்ளார். இதனைப் பார்த்த அந்தப் பகுதி மக்கள் பலரும் ஓடி வந்து அவருக்கு தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தியுள்ளனர். ஆனாலும் அவரால் அந்த இழப்பை தாங்க முடியாமல் கதறி அழுதுள்ளார். அதுமட்டுமல்லாமல், அந்தச் சங்கிலி திருடனோடு மல்லுக்கட்டியதில் அந்தப் பெண்ணுக்கு காயமும் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில், அங்கிருந்த சிலர் இது குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பேரில் அங்கு வந்த போலீசார், தனது தங்கச் சங்கிலியைப் பறிகொடுத்த லிஜியிடம் திருடர்கள் குறித்து விசாரணை நடத்தியுள்ளனர். அதன் பின்னர், அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி கேமிராவை பரிசோதித்துள்ளனர். அதில், தனது டூவீலரில் வந்த லிஜி ரோட் கிராஸ் செய்வதற்காக இண்டிகேட்டர் போட்டுக்கொண்டு காத்திருந்துள்ளார். அப்போது அடுத்தடுத்து வாகனங்கள் வந்துள்ளது. அதில் கடைசியாக வந்த வாகனத்தில் வந்த ஹெல்மெட் அணிந்த ஒருவன், திடீரென லிஜியின் சங்கிலியை பறித்து செல்வதும், அதனால் லிஜி கதறி கூச்சலிட்டு கத்துவதும் தெளிவாக பதிவாகியிருக்கிறது.

இதனையடுத்து, அந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும், அந்த டூவீலர் அடுத்தடுத்து சென்ற இடங்களில் இருக்கும் சிசிடிவி காட்சிகளையும் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண்ணை வழிமறித்து, திருடன் தங்க சங்கிலியை பறித்து செல்லும் சிசிடிவி வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனைப் பார்த்த சமூக ஆர்வலர்கள் பலரும் இவ்வாறு வாகனத்தில் செல்லும் பெண்களின் நகைகளை பறிக்கும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது எனவும், இதன் காரணமாக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

படையெடுக்கும் புலிகள்; பாதுகாப்பு வளையத்தில் மூணாறு !

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Invading Tigers; Munnar in the observation ring

கோடை வெயிலின் தாக்கத்தால் வனப்பகுதியை விட்டு வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக கிராமங்களுக்கு நுழைவது தொடர்கதையாகி வருகிறது. வனத்துறை சார்பில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தொட்டிகள் திறக்கப்பட்டு வரும் நிலையில் அதையும் மீறி பல்வேறு இடங்களில் யானை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி உணவிற்காக கிராமங்களுக்குள் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.

அண்மையில் மயிலாடுதுறையில் புகுந்த சிறுத்தை தற்பொழுது வரை மர்மமாகவே நீடித்து வருகிறது. இந்நிலையில் தமிழக-கேரள எல்லையான மூணாறு பகுதியில் சர்வ சாதாரணமாக புலி நடமாட்டம் இருப்பது அந்த பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கன்னிமலா பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட் பகுதியில் புலிகள் நடமாட்டம் இருப்பதாக தோட்டத் தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தற்போது இது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோ ஒன்றில் மூன்று புலிகள் தேயிலை எஸ்டேட் பகுதியில் இருந்து வனப்பகுதிக்குள் நுழைவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த புலிகளை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர். புலிகள் நடமாட்டம் இருப்பதால் அந்தப் பகுதி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

Next Story

கோவில் காவலாளி அடித்துக் கொலை; போலீசார் தீவிர சோதனை!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
69-year-old temple watchman was beaten to passed away near Mappedu

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் மப்பேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேட்டுமாநகர் பகுதியில் புதிதாக விநாயகர் கோயில் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் கட்டுமான பணிக்காக செங்கல் இறக்கி வைத்திருப்பதால், அதனை பாதுகாப்பதற்காக  கோவிலுக்கு காவலாளியாக செல்வம் (69) என்ற முதியவர் கடந்த இரண்டு நாட்களாக வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று காலை கோவில் காவலாளி செல்வம் தலையில் பலத்த காயங்களுடன் விழுந்து கிடப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள் மப்பேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து மப்பேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு நடத்தினர். தலையில் பலத்த காயங்களுடன் உயிரிழந்த காவலாளி செல்வம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், முதியவர் செல்வத்திற்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் பிள்ளைகள் ஏற்கெனவே இறந்துவிட்ட நிலையில், தனியாக வாழ்ந்து வந்தது தெரிந்தது. மப்பேடு மாநகரில் உள்ள செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்த இவர் கடந்த இரண்டு நாட்களாக கோயில் கட்டுமான பணி காரணமாக இரவு காவலாளியாக வேலை பார்த்ததும் தெரியவந்தது. எனவே புதிதாக கட்டப்படும் கோயிலில் 69 வயதான செல்லம் முதியவர் காவலாளியாக வேலை பார்த்த நிலையில் அவரை அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எதற்காக இந்த கொலை நடைபெற்றது? இந்தக் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து மப்பேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவலாளிக்கே பாதுகாப்பு இல்லாத சம்பவத்தால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.