இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் வரவுள்ள நிலையில், ஆட்சியை தக்க வைக்க பாஜகவும், இழந்த ஆட்சியை மீண்டும் பிடிக்க காங்கிரஸ் கட்சியும் படுதீவிரமாக செயல்பட்டு வருகிறது. பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்துவதற்கு எதிர்க்கட்சிகள் சார்பில் பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் ஜனதா தளம், திமுக, காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ் உட்பட 25க்கும் மேற்பட்ட கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா என்ற கூட்டணியை உருவாக்கித் தங்களது ஆதரவைப் பெருக்கி வந்தன.
ஆனால், இந்தியா கூட்டணியை ஒருங்கிணைத்த நிதிஷ்குமார் கருத்து வேறுபாடு காரணமாக இந்தியா கூட்டணியில் இருந்து விலகி பாஜகவுடன் இணைந்துள்ளார். அத்தோடு, பீகார் மாநிலத்தில் ஆட்சியில் இருந்த மகா கூட்டணியில் இருந்து விலகி பாஜகவுடன் சேர்ந்து மீண்டும் பீகார் மாநிலத்தின் முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
இந்தியா கூட்டணி போலவே என்.டி.ஏ என்ற பெயரில் பாஜக மற்றுமொரு கூட்டணியை உருவாக்கியுள்ளது. கடந்த தேர்தலில் என்.டி.ஏ கூட்டணியில் அதிமுக இடம் பெற்றிருந்த நிலையில் இந்த முறை கூட்டணியில் இருந்து விலகியுள்ளது. என்.டி.ஏ கூட்டணியில் பாஜகவிற்கு அடுத்த பெரிய கட்சியாக அதிமுக இருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது, தேர்தல் கருத்துக்கணிப்புக்களை தனியார் செய்தி நிறுவனங்கள் வெளியிட்டு வரும் நிலையில், அதில் அனைத்திலும் இந்தியாவின் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று கூறியுள்ளது. இருப்பினும் எதிர்க்கட்சிகள் பலம் பெற்றுவிடக்கூடாது என்று பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பாஜக வலுவாக இல்லாத மாநிலங்களில் மற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து எதிர்க்கட்சிகளுக்கு நெருக்கடியை கொடுக்க ஏற்பாடுகளை செய்து வருகிறது.
அந்த வகையில், ஆந்திர மாநிலத்திலும் என்.டி.ஏ கூட்டணியை வலுப்படுத்த பாஜக முயன்றுவருகிறது. அதனடிப்படையில், தெலுங்கு தேசம் கட்சியுடன் பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த பேச்சு வார்த்தை இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நேற்று அக்கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயு டெல்லி சென்று உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரை சந்தித்து பேசியுள்ளார்.
இந்த நிலையில் ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பிரதமர் மோடியை சந்தித்து பேசியுள்ளார். முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஏற்கெனவே மத்திய அரசுடன் இணக்கமான உறவை வைத்துள்ள நிலையில் தற்போது பிரதமரை சந்தித்து பேசியுள்ளார். ஆந்திர மாநிலத்தில் ஆளும் கட்சியாக இருக்கும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸும், எதிர்க்கட்சியாக இருக்கும் தெலுங்கு தேசம் கட்சியும் அடுத்தடுத்து பிரதமரை சந்தித்துள்ளது அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த சந்திப்பு ஒரு மாநிலத்தின் இரு பிரதான கட்சிகளும் ஒரே அணியில் இடம்பெறுவதற்காக மாறி மாறி பிரதமரை சந்திக்கின்றனர் என்றும் அரசியல் திறனாய்வாளர்கள் கூறிவருகின்றனர்.