பிரதமர் மோடியை கொலை செய்ய சதி திட்டம் தீட்டியதாக எழுத்தாளர்கள்,மனித உரிமை ஆர்வலர்கள்,இடதுசாரி அமைப்பை சார்ந்த 5 பேரை நேற்று புனே காவல்துறை கைது செய்தது.
இந்த கைது தொடர்பாக ரீட் மனு தாக்கல் செய்யப்பட்டது. இன்று காலை வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி முன்பு முறையீடப்பட்டது.இன்று மதியம் விசாரணை எடுக்க படும் என்று ஒத்துக்கொள்ளவே மாலை 4.30 மணி அளவில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா,நீதிபதி கான் வில்கர் மற்றும் நீதிபதி சந்திரா சூடு ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பு வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.
இந்த விசாரணையின் போது அரசு சார்பில் வழக்கறிஞர் துஷார் மெஹதவும், ரீட் மனுதாரர்கள் சார்பில் அபிஷேக் மனு சிங்வி ஆஜரானார். அப்போது நீதிபதி சந்திரா சூடு" ஜனநாயகத்தில் எதிர்கருத்து என்பது பாதுகாப்பு வால்வு . அதை தொடர்ந்து எதிர்த்தும் அழுத்தும் போதும் அது ஒரு கட்டத்தில் வெடித்து விடும். அது போன்ற ஒரு நிலை எப்போதும் வந்துவிட கூடாது" என குறிப்பிட்டார்.
அதே போல அபிஷேக் மனு சிங்வி வாதத்தில் " இது போன்ற தொடர்ச்சியான கைதுகள் நடந்து வருகிறது. இதனால் ஜனநாயகம் என்பது படுகொலை செய்யப்பட்டது போல ஆகிவிடும். இதை தடுத்து நிறுத்த வேண்டிய கடமை உச்ச நீதிமன்றத்திற்கு இருக்கிறது" என்று குறிப்பிட்டார்.
அதற்கு நீதிபதிகள் " அது எங்களுக்கு நன்றாக புரிகிறது . எதற்காக இந்த கைது என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறோம்.அதற்காக தான் மகாராஷ்டிரா அரசுக்கு நோட்டீஸ் அனுப்புகிறோம் என்று சொல்லி இருக்கிறார்கள். 5 போரையும் வீட்டுக்காவலில் வைக்க உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை அடுத்த வாரம் வியாழக்கிழமைக்கு ஒத்து வைத்தனர்.
அதற்கு முன்னதாக இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட கவுதம் நவ்லகா சார்பாக அவருடைய வழக்கறிஞர் ஆட்கொணர்வு மனுவை டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இந்த மனு மீதான விசாரணையின் போது, ஏன் கவுதம் நவ்லகாவை கைது செய்தோம் என்று எந்தவொரு குறிப்பிட்ட குற்றச்சாட்டையும் கூற முடியாமல் மகாராஷ்டிரா காவல்துறை திணறியிருக்கிறது. அதே போல , அவரை புனே அழைத்துச் செல்வதற்காக மகாராஷ்டிரா காவல்துறை தாக்கல் செய்த ஆவணங்களிலும் ஏன் கைது செய்யப்பட்டார் என்ற காரணம் தெளிவாக குறிப்பிடப்படவில்லை.
அதை பார்த்த பின்னர் நீதிபதி "அவர் மீது என்ன குற்றச்சாட்டு உள்ளது?" என கேட்டபோது, அதிகாரிகள் தெளிவான எந்தவொரு பதிலையும் கூறவில்லை. அதன் பிறகுதான் அவரை புனே அழைத்துச் செல்ல கீழமை நீதிமன்றம் அளித்த உத்தரவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது. மேலும், புனேவில் நடைபெற்ற எல்கார் பரிஷத் நிகழ்விலும் நவ்லகா கலந்துகொள்ளவில்லை என அவரது வழக்கறிஞர் நித்யா ராமகிருஷ்ணன் நீதிபதியிடம் தெரிவித்திருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல், நவ்லகா வீட்டில் சோதனையிடவும், அவரை கைது செய்யவும் எந்தவொரு விதிமுறையும் மகாராஷ்டிரா காவல்துறை கடைபிடிக்கப்படவில்லை , கைது வாரண்ட் மராத்தியில் இருந்ததாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. நவ்லகாவை புனே அழைத்துச் செல்வதற்காக மகாராஷ்டிரா போலீஸார் அரை மணிநேரத்தில் கீழமை நீதிமன்றத்தில் ரிமாண்ட் உத்தரவு பெற்றது எப்படி என்பது குறித்தும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
நவ்லகாவை கைது செய்ய சாட்சிகளை புனேவிலிருந்து மகாராஷ்டிரா போலீஸார் அழைத்து வந்துள்ளனர். ஆனால், கைது செய்யப்படும் நபர் எங்கு கைது செய்யப்படுகிறாரோ அந்த பகுதியை சேர்ந்தவர்தான் சாட்சிகளாக இருக்க வேண்டும் என்பதுதானே சட்டம் என்றும் டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.