அரபு, உருது, பாரசீகம், இஸ்லாமிய ஆய்வுகள், தத்துவங்கள், பாரம்பரிய மருத்துவம் உள்ளிட்டவை தொடர்பான படிப்பு மதரஸா கல்வி ஆகும். அதில், உத்தர பிரதேச மாநிலத்தில் இஸ்லாமிய மாணவர்கள் படிக்கும் இந்த மதரஸா கல்வி முறையை ஒழுங்குபடுத்தும் வகையில், அம்மாநில அரசு, ‘மதரஸா கல்விச் சட்டம் 2004’ என்ற சட்டத்தை கொண்டு வந்தது.
இந்த சட்டத்தின் மூலம், உத்தரப்பிரதேச மாநிலத்தில் மொத்தம் 25,000 மதரஸாக்கள் செயல்படுகின்றன. இவற்றில் 16,000 மதரஸாக்கள் அங்கீகாரம் பெற்றவை. இந்த மதரஸாக்களில் சுமார் 17 லட்சம் இஸ்லாமிய மாணவர்கள் கல்வி கற்கின்றனர். இவற்றில் சுமார் 10,000 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த மதரஸா கல்வி வாரியத்தால் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்புகள் கற்பிக்கப்பட்டும், டிப்ளோமா சான்றிதழ்களும் வழங்கப்பட்டும், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இதனிடையே, இஸ்லாமிய மாணவர்களுக்கு கல்வி பயிற்றுவிக்கும் மதரஸா கல்வி நிறுவனங்கள் மீது அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் அன்சுமன் சிங் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை அலகாபாத் நீதிமன்றம் விசாரணை நடத்தி வந்தது.
இதனையடுத்து, கடந்த மார்ச் மாதம் 22ஆம் தேதி அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதிகள் விவேக் சவுத்ரி மற்றும் சுபாஷ் வித்யார்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த சட்டம் தொடர்பாக பரபரப்பு தீர்ப்பு ஒன்றை வழங்கியது. அந்த தீர்ப்பில், ‘தனது கடமைகளை ஆற்றும்போது, மதத்தின் அடிப்படையில் அரசு பாகுபாடு காட்டக்கூடாது. மதம் சார்ந்த கல்விக்கு வாரியத்தை உருவாக்கவோ அல்லது பள்ளிக் கல்விக்கான வாரியத்தை ஒரு குறிப்பிட்ட மதம் மற்றும் அதனுடன் தொடர்புடைய தத்துவத்திற்காக மட்டும் அமைக்கவோ அரசுக்கு அதிகாரம் இல்லை. அரசு அப்படி செய்தால், இந்திய அரசியலமைப்பின் மதச்சார்பின்மை கொள்கைகளை மீறுவதாகும்.
எனவே, உத்தரப்பிரதேச மாநில அரசின் மதரஸா கல்விச் சட்டம் 2004 என்பது அரசியல் சாசனத்துக்தே எதிரானது. இந்தச் சட்டம் நாட்டின் மதச்சார்பின்மைக்கு எதிரானது. ஆகையால், உத்தரப் பிரதேச மாநிலத்தில் மதரஸாக்களில் படிக்கும் மாணவர்களை, மற்ற பள்ளிகளுக்கு மாற்ற வேண்டும் என்று கூறி இந்த சட்டத்தை ரத்து செய்தது.
இந்நிலையில், அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் இன்று (05-04-24) விசாரித்தது. அப்போது நீதிபதிகள், ‘அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மதரஸாக்களை ஒழுங்குபடுத்தவே வழக்கு தொடரப்பட்டது. அதில், மதரஸாக்கள் மதச்சார்ப்பற்ற தன்மையுடன் செயல்பட வேண்டும் என்றெல்லாம் சொல்லப்படவில்லை. மதரஸாக்களை ஒழுங்குபடுத்த உத்தரவு பிறப்பிக்கலாம். அதற்காக மதரஸாக்கள் சட்டத்தை ரத்து என்று தீர்ப்பளிக்க முடியாது.
மேலும், வாரியத்தை அமைப்பது மதச்சார்பின்மையை மீறும் என அலகாபாத் உயர்நீதிமன்றம் கூறியது சரியானது அல்ல. எனவே, மதரஸா சட்டம் செல்லாது எனவும், மதரஸா மாணவர்களை வேறு பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்ற அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது’ என்று கூறி இந்த வழக்கு விசாரணையை வருகிற ஜூலை 2வது வாரத்துக்கு ஒத்திவைக்கப்படுவதாக உத்தரவிட்டனர்.