இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே கடந்த 30 ஆண்டுகள் மேலாக எல்லைகள் தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. தொடர் பேச்சுவார்த்தை காரணமாக கடந்த 1993 மற்றும் 1997ஆம் ஆண்டில் போடப்பட்ட ஒப்பந்தங்களால் எல்லையில் அமைதி நிலவி வந்தது. இருந்த போதிலும், அவ்வப்போது, இது தொடர்பான பிரச்சனை தொடர்ந்து பூதாரகமாகி வந்தது. அதன்படி, கடந்த 2020ஆம் ஆண்டு மே மாதம், இந்திய-சீனா எல்லையில் இருவீரர்களுக்கும் எல்லைகள் தொடர்பாக மோதல் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து, கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன ராணுவ வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில், 20 இந்திய ராணுவ வீரகள் உயிரிழந்தனர். இந்த மோதலால் இருநாட்டு உறவுகளில் புதிய சிக்கல் உருவானது. அந்த மோதலுக்கு பிறகு, சீன எல்லையில் பதற்றம் அதிகரித்து காணப்பட்டது.
இந்தியாவை எப்போதும் சீண்டி பார்க்கும் சீனா, இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள 11 பகுதிகளின் பெயர்களை மாற்றியது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனையடுத்து, சீனா கடந்த ஆண்டு ஆகஸ்ட் 28ஆம் தேதி அருணாச்சலப் பிரதேசத்தை அந்நாட்டுடன் சேர்த்து வரைபடத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்தது. கல்வான் தாக்குதல் சம்பவத்துக்கு பிறகு, பிரதமர் மோடிக்கும், சீன அதிபர் ஷி ஜின்பிங்குக்கும் இடையே சந்திப்பு நடக்காமலே இருந்தது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், 2024ஆம் ஆண்டுக்கான பிரிக்ஸ் அமைப்பின் 16வது உச்சிமாநாடு ரஷ்யாவில் நடைபெற்றது. ரஷ்யா, தென்னாப்பிர்க்கா, சீனா, இந்தியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளை உள்ளடக்கிய ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பின் மாநாடு, கடந்த 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் நடந்தது. இந்த மாநாட்டில், உக்ரைன் - ரஷ்யா போர், இஸ்ரேல்- காசா-லெபனான்-ஈராக் இடையிலான போர், காலிஸ்தான் அமைப்பினரை முன்வைத்து கனடாவுக்கும், இந்தியாவுக்கும் இடையே ஏற்பட்ட தூதரக உறவு சிக்கல் உள்ளிட்ட விவகாரங்கள் பேசப்பட்டதாக கூறப்பட்டது.
இந்த மாநாட்டின் இடையே, பிரதமர் மோடிக்கும், சீன அதிபர் ஷி ஜின்பிங்குக்கும் இடையே சந்திப்பு நடந்தது. இந்த சந்திப்பின் போது, இந்திய-சீன எல்லை பிரச்சனை குறித்து பேசப்பட்டதாகக் கூறப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையில், இரு நாடுகளுக்கு இடையேயான எல்லை பிரச்சனையில் தீர்வு காண ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகச் சொல்லப்பட்டது.
இந்த நிலையில், கிழக்கு லடாக்கின் டெபாங் மற்றும் டெம்சோக் ஆகிய எல்லை பகுதிகளில் இருந்த இந்திய-சீன ராணுவ படைகளை, விலக்கி கொள்ளும் நடவடிக்கை கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளன. இந்திய ராணுவம் மற்றும் சீனாவின் மக்கள் விடுதலை ராணுவம் ஆகிய இரண்டும் தற்போது தங்களது படைகளை திரும்பப் பெறுவதையும், எல்லையில் அமைக்கப்பட்ட தற்காலிக மற்றும் நிரந்தர உள்கட்டமைப்பை அகற்றுவதையும் சரிபார்த்து வருகின்றன. இது குறித்தான முறையான அறிவுப்பு வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.